நாமக்கல்: கலை, பண்பாட்டுத்துறை சார்பில், சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய, சேலம் மண்டலத்திற்கான, இரண்டு நாள், ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சி துவக்க விழா நேற்று நடந்தது. தமிழக அரசின், கலை பண்பாட்டு துறை ஆணையர் கலையரசி, கலெக்டர் மெகராஜ் ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர். அப்போது, ஆணையர் கலையரசி பேசியதாவது: தமிழக அரசின், முத்திரை ஓவியம், மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையை வடிவமைத்த, சென்னை அரசு கவின்கலைக் கல்லூரி, கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரி. சென்னை அண்ணா நகர் முகப்பு வளைவு, சென்னை பல்கலை நுழைவு வாயில் ஆகியவற்றை வடிவமைத்த மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி ஆகியவை, மிகச்சிறந்த ஓவியர்களையும், தலைசிறந்த சிற்பிகளையும் உருவாக்கியுள்ளன. சிறந்த ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்களுக்கு, கலைச்செம்மல் விருது வழங்குதல், மாநில அளவிலான ஓவிய, சிற்பக்கலைக்காட்சி நடத்துதல், தனிநபர், கூட்டு கண்காட்சி நடத்த நிதியுதவி வழங்குதல் போன்ற பணிகளை, தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை மேற்கொண்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். இந்த கண்காட்சியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 30 கலைஞர்களின் கை வண்ணத்தில் உருவான, 125 ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. கோட்டோவியம், தஞ்சவூர் ஓவியம், எண்ணெய் வண்ண ஓவியம், நீர் வண்ண ஓவியம், நவீன ஓவியம், கிரையான் ஓவியம் உள்ளிட்ட பல்வேறு முறைகளில் வரையப்பட்ட ஓவியர்களின் கலைப் படைப்புகளை கண்டு மக்கள் வியந்தனர். இக்கண்காட்சியில், சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. முதல், மூன்று இடங்களை பெற்ற, தலா, 10 கலைஞர்களுக்கு, முறையே, தலா, 3,500, 2,500, 1,500 ரூபாய் பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE