நாமக்கல்: நான்கு மாநிலங்களில், பறவைக் காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதால், முட்டை கொள்முதல் விலை, நாமக்கல் மண்டலத்தில், இரண்டு நாட்களில், 50 காசு குறைந்துள்ளது.
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஹிமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில், காகங்கள், நீர்நிலைகளில் வாழும் பறவைகள் மற்றும் இடம்பெயரும் பறவைகளுக்கு, பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, கேரள மாநிலம் கோட்டயம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில், வாத்துப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் தாக்கம் ஏற்பட்டு, 40 ஆயிரம் வாத்துகள் அழிக்கப்பட்டன. அப்பகுதி, தனி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, வெளி இடங்களில் இருந்து வாத்து குஞ்சுகள், வாத்துகள், தீவனங்கள் அப்பகுதிக்கு வரவும், அங்கிருந்து வெளியே எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, கோழி, வாத்து, முட்டை விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் வளர்க்கப்படும், ஐந்து கோடி கோழிகள் மூலம், தினமும், நான்கு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில், இரண்டு கோடி முட்டைள், லாரிகள் மூலம், கேரளா மாநிலத்துக்கு, தினமும் அனுப்பப்படுகின்றன. பறவைக் காய்ச்சல் நோய் தாக்கம் காரணமாக, கேரளாவில் முட்டை விற்பனை சரிந்துள்ளதால், அம்மாநிலத்துக்கு, முட்டை அனுப்புவது குறைந்துள்ளது. இந்நிலையில், நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, விற்பனை நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். பல்வேறு மாநிலங்களில், முட்டை விலை குறைந்துள்ளதால், நாமக்கல் மண்டலத்திலும், முட்டை கொள்முதல் விலையை குறைக்க முடிவு செய்யப்படது. அதையடுத்து, 485 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 25 காசு குறைக்கப்பட்டு, 460 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. நாமக்கல் மண்டலத்தில், கடந்த, இரண்டு நாட்களில், கொள்முதல் விலை, 50 காசு குறைந்துள்ளதால், பண்ணையாளர்களுக்கு, நான்கு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பிற மண்டல முட்டை விலை (காசுகளில்) நிலவரம்: சென்னை, 485, ஐதராபாத், 420, விஜயவாடா, 460, பர்வாலா, 470, மும்பை, 510, மைசூரு, 475, பெங்களூரு, 475, கோல்கட்டா, 500, டில்லி, 495. கிலோ, 49 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டைக்கோழி விலையை, இரண்டு ரூபாய் குறைத்து, 47 ரூபாய்; கிலோ, 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி விலையை, ஆறு ரூபாய் உயர்த்தி, 72 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE