சேலம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு, இணைய வழியில் நடத்தப்படும் ஜே.இ.இ., போட்டித்தேர்வு பயிற்சியில், குறைந்த மாணவர்களே சேர்ந்துள்ளனர். இதனால், ஆசிரியர்கள் முயற்சி எடுத்து, மாணவர்களை சேர்க்க கோரிக்கை எழுந்துள்ளது.
தேசிய தேர்வு முகமை சார்பில், ஐ.ஐ.டி., ஜே.இ.இ., போட்டித்தேர்வு நடத்தப்படுகிறது. இதன்மூலம், மத்திய அரசின் கீழ் செயல்படும், ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில், உயர்கல்வியில் சேர முடியும். இப்போட்டித்தேர்வுகளில், மாநில அரசு, அதன் உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பயிற்சி பெற, புதுடில்லியை சேர்ந்த, 'நெக்ஸ்ட் ஜென் வித்யா' நிறுவனத்துடன், தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. மாணவர்களுக்கு தனித்தனியே யூசர், ஐ.டி., பாஸ்வேர்ட் கொடுத்து, இணையவழியில், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில், பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள், பயிற்சி பெறுவதை கண்காணிக்க, அந்தந்த பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கு, தனித்தனியே யூசர் ஐ.டி., கொடுக்கப்பட்டுள்ளது. இதில், பங்கேற்க விரும்பும் மாணவர்கள், டிச., 31க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஜன., 4ல், பயிற்சி தொடங்கிய நிலையில், சொற்ப எண்ணிக்கையில் மாணவர்கள் இணைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில், சில பள்ளிகள் மட்டுமே இணைந்துள்ளன. இதனால், அனைத்து அரசு பள்ளிகளில், ஆர்வமுள்ள மாணவர்களை உடனே சேர்க்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, கல்வி அலுவலர்கள் கூறுகையில், 'மாணவர்களின் வீடுகளில் இணைய வசதி இருப்பதில்லை. இதனால், ஐ.ஐ.டி., - ஜே.இ.இ., பயிற்சி பெறும் மாணவர்களுக்கு, பள்ளியில் இணையவழி பயிற்சி பெற வசதி ஏற்படுத்தி தர வேண்டும். அத்துடன், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் உள்ள வசதி, வாய்ப்பு குறித்து, மாணவர்களுக்கு எடுத்துரைத்து, அதற்கான பயிற்சியில் இணைய, ஆசிரியர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE