சென்னை : நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என அறிவித்துவிட்டார். ஆனால் ரசிகர்கள், விடாது அவர் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைதியாக போராட்டம் நடத்தினர்.
அரசியலுக்கு வருகிறேன், மக்களை ஏமாற்றமாட்டேன், தமிழக மக்களுக்காக என் உயிர் போனாலும் பரவாயில்லை என கூறிய நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். ஆனால் அண்ணாத்த படப்பிடிப்பில் அவருக்கு ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு பிரச்னையால் தன் முடிவை மாற்றி கொண்டார். உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரவில்லை, என்னை மன்னித்து விடுங்கள் என அறிவித்தார். இந்த முடிவை ரஜினி ரசிகர்கள் ஒரு பிரிவினர் ஏற்றுக் கொண்டாலும் மற்றொரு பிரிவினர் ஏற்கவில்லை.

அவர் அரசியலுக்கு வர வலியுறுத்தி அறவழி போராட்டத்தில் இன்று(ஜன., 10) ஈடுபட போவதாக அறிவித்தனர். இதற்கு ரஜினி மக்கள் மன்றம் எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தாலும் தங்கள் முடிவில் பின்வாங்காத ரசிகர்கள் பலர் இன்று சென்னை வள்ளூவர் கோட்டத்தில் அமைதி வழியில் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பலரும் ''அரசியலுக்கு வா தலைவா, அரசியலுக்கு வாங்க ரஜினி'' என்ற வாசகம் அடங்கிய பதாதைகளை ஏந்தி போராட்டம் செய்தனர். பல ஊர்களில் வந்துள்ள ரசிகர்கள் அவரை அரசியலுக்கு வரச் சொல்லி கோஷங்களை எழுப்பினர்.

இந்த விஷயம் டுவிட்டரில் டிரெண்ட் ஆனது. ''தலைவா மீண்டும் எங்களுக்கு ஒரு விடுதலை போராட்டம், எங்களுக்கு நீங்க வேண்டும், வேண்டிக் கேட்கிறோம், உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்'' உள்ளிட்ட கருத்துக்கள் சமூகவலைதளங்களை காண முடிகிறது.
அதேசமயம் அவர் தான் உடல்நிலையை கருத்தில் கொண்டு வேண்டாம் என கூறிவிட்டாரே, பின்பு ஏன் இது போன்று போராட்டம் செய்ய வேண்டும் போன்ற கருத்துக்களையும் காணமுடிகிறது.
இதனால் டுவிட்டரில் #அரசியலுக்கு_வாங்க_ரஜினி என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. அதன் உடன் #அரசியலுக்கு_வாங்க_தலைவா, #வள்ளுவர்கோட்டம்_அழைக்கிறது ஆகிய ஹேஷ்டாக்குகளும் டிரண்ட் ஆகின.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE