சிட்னி: சிட்னியில் இன்றும் இந்திய அணி வீரர்களை இனரீதியாக விமர்சனம் செய்த ஆஸி., ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் வெளியேற்றப்பட்டதும் போட்டி மீண்டும் துவங்கியது. இந்த சம்பவத்திற்காக இந்திய அணியிடம் ஆஸி., கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கோரியுள்ளது.
கடந்த 2008ல் சிட்னியில் நடந்த டெஸ்டில் இந்தியா, ஆஸ்திரேலியா மோதின. போட்டியின் 3வது நாளில் இந்தியாவின் ஹர்பஜன் சிங், சைமண்ட்சை குரங்கு என திட்டியதாக 'இன வெறி' சர்ச்சை கிளம்பியது. ஹர்பஜனுக்கு மூன்று டெஸ்டில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா தொடரை ரத்து செய்வதாக மிரட்டியது. பின் ஐ.சி.சி., தலையிட, தடை நீக்கப்பட்டது.
புகார்
தற்போது 13 ஆண்டுக்குப் பின் மீண்டும் சிட்னி டெஸ்டில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. நேற்று (ஜன.,09) மூன்றாவது நாளில் ஆஸ்திரேலியஅணி இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது எல்லைக் கோட்டுக்கு அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய வீரர்கள் சிராஜ், பும்ராவை பார்த்து, கேலரியில் இருந்த ரசிகர்கள் சிலர், இனவெறியை துாண்டும் வகையில் 'குரங்கு' என திட்டினார். இவர்கள் மதுபோதையில் இருந்தனர். இருவரும் கேப்டன் ரகானேயிடம் தெரிவித்தனர். உடனடியாக ரகானே களத்தில் இருந்த அம்பயர்களிடம் புகார் தெரிவித்தார். தவிர போட்டி முடிந்ததும் இதுகுறித்து நீண்ட நேரம் இந்திய வீரர்கள் அம்பயர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர். இதன் பின் இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில், ஆஸ்திரேலியாவிடம் முறைப்படி புகார் அளிக்கப்பட்டது.
வெளியேற்றம்
நான்காம் நாளான இன்றும், இந்திய வீரர்களை, ஆஸி., ரசிகர்கள் இனவெறியை தூண்டும் வகையில் விமர்சனம் செய்தனர். இதனையடுத்து கவனத்தை ஈர்க்கும் வகையில், முகமது சிராஜ், பவுலிங் செய்வதை நிறுத்தினார். கேப்டன் ரஹானே, சிராஜிடம் பேசிய பிறகு, நடுவர்களிடம் புகார் அளித்தார்.
தொடர்ந்து மைதான பாதுகாப்பு அதிகாரிகளை, ரசிகர்களை மைதானத்தில் இருந்து வெளியேற்றினர். இதன் பின்னரே போட்டி மீண்டும் துவங்கியது. இதனால், மைதானத்தில் பரபரப்பு நிலவியது

கடும் நடவடிக்கை
இதனை தொடர்ந்து ஆஸி.,கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கை: இனரீதியாக தாக்குதல் நடத்துபவர்களை ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஒரு போதும் அனுமதிக்காது. வரவேற்காது. தரக்குறைவாக நடந்து கொண்டவர்களை வன்மையாக கண்டிக்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக ஐசிசி விசாரணை நடத்தி வருகிறது. அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம். இந்திய வீரர்களை திட்டியவர்கள் மீது கடும் தண்டனை எடுப்பதுடன், அவர்கள் நீண்ட காலம் தடை விதிப்பது, போலீசாரிடம் ஒப்படைப்பது குறித்தும் பரிசீலனை செய்யப்படும். இந்த விவகாரத்தை நாங்கள் மிகவும் தீவிரத்துடன் அணுகுவோம். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து எங்களின் விதிப்படி ஆஸி., மைதானங்களில், இனி அந்த நபர்களை அனுமதிக்க மாட்டோம். இந்திய கிரிக்கெட் அணியினரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். இந்த விஷயத்தில் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கோஹ்லி கண்டனம்
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE