காணக்கிடைக்காத அரிய நுால்களை சேகரித்து ஆவணப்படுத்தி பழமையான விஷயங்களை இளைய தலைமுறைக்கு பயன்பட செய்யும் அதிசய மனிதராக வலம் வருகிறார் சிவகங்கை 'புத்தகக்கடை' முருகன்.
சித்தர்களின் அரிய மருத்துவ நுால்கள், அகத்தியரின்மருத்துவ நுால்கள் இன்றைய கொரோனா, டெங்கு வைரசிலிருந்து நம்மை பாதுகாத்து வருகிறது. நில வேம்பு கசாயம், கபசுர குடிநீர் தான் மக்களை தற்காலிகமாக பாதுகாத்தது. இது போன்ற அரிய மூலிகை வைத்திய நுால்களை தேட ஆரம்பித்தார் சிவகங்கையில் பழைய புத்தகக்கடை வைத்திருக்கும் முருகன். இதற்காக கிராமங்களுக்கு சென்றார். சித்த வைத்தியம் சார்ந்த புத்தகங்களை தேடியவர் பின்பு ஆர்வம் காரணமாக இலக்கியம், தமிழ், மண் சார்ந்த புத்தகங்கள், ஜோதிடம், மாந்த்ரீகம் போன்ற மறு பதிப்பு செய்யப்படாத புத்தங்களை சேகரித்தார். 7 ஆயிரம் புத்தகங்களை சேகரித்த இவர் அதனை நகல் எடுத்து பி.டி.எப்., பைல்களாக மாற்றி கணினியில் சேமித்துள்ளார். ஆயிரம் புத்தகங்களை ஆவணப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். இவரின் தேடலில் கிடைத்த புத்தகங்களை தேவைப்படுவோருக்கு இலவசமாக பென் டிரைவ்களில் பதிவேற்றம் செய்து கொடுக்கிறார். தஞ்சை தமிழ் பல்கலை இவரை அழைத்து பாராட்டு விழா நடத்தியுள்ளது. அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் இவரது சேவையை பாராட்டி விருது வழங்கியுள்ளனர். பழைய அரிய நுால்களுக்காக புத்தகக்கடை முருகன் வீட்டை தேடி சிவகங்கைக்கு வருபவர்கள் பலர் உள்ளனர்.
முருகன் தெரிவித்ததாவது: மறு பதிப்பில்லாமல் அழிந்து வரும் நுால்களை சேகரித்து வரும் தலைமுறையினர் பயன் பெற வேண்டும். பழந்தமிழர்களின் உழைப்பு வீண போக கூடாது என்ற நோக்கத்தில் பழைய புத்தகங்களை சேகரிக்க தொடங்கினேன். 1879ல் மைசூர் அரண்மனை சர்ஜன் மஞ். ஜகநாதன்நாயுடு எழுதிய அகத்திய முனிவர் அருளி செய்த வைத்திய காவியம் புத்தகம் போன்று நிறைய நுால்களை ஆவணப்படுத்தியுள்ளேன். பழைய புத்தகங்கள் அரவைக்கு செல்லும் முன் தேவையான புத்தகங்கள் இருந்தால் எனக்கு தகவல் தருவார்கள் அதனை விலைக்கு பெற்று ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இதுவரை 7 ஆயிரம் புத்தகங்கள் ஆவணப்படுத்தியுள்ளேன். டிஜிட்டல் நுாலகம் அமைத்து நான் சேகரித்த அரிய நுால்கள் அனைவரும் பயன் பெற வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றார்.
செய்தி: கதிர்
புகைப்படம்: மாது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE