ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் மாயமான 62 பேருடன் மாயமான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை மீட்கும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தோனேஷியாவைச் சேர்ந்த, 'ஸ்ரீவிஜயா ஏர்' என்ற விமான நிறுவனம், உள்நாடு மற்றும் சர்வதேச சேவைகள் வழங்கி வருகிறது. இந்த விமான நிறுவனத்துக்கு சொந்தமான, 'போயிங் 737' விமானம், ஜகார்த்தாவில் இருந்து, நாட்டின் மேற்கு காலிமாண்டன் மாகாணத்தில் உள்ள போன்டியானக்குக்கு, நேற்று மதியம்(ஜன.,09) புறப்பட்டது. இந்த விமானம், 90 நிமிடத்தில் போண்டியானக்கை அடைய வேண்டும். ஆனால், விமானம் புறப்பட்ட, 44 நிமிடங்களில், அந்த விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த விமானத்தில், 56 பயணியர் மற்றும் ஆறு விமான ஊழியர்கள் இருந்தனர். திடீரென மாயமான விமானத்தை தேடும் பணியில், மீட்புப் பணிகள் குழுவினர் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, இந்தோனேஷியாவின் வடக்கே உள்ள ஆயிரம் தீவுகள் பகுதியில், கடலில் சில உலோகப் பொருட்கள் இருப்பதாக, மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு தேடுதல் பணி நடந்தது. அதில், ஜாவா கடல் பகுதியில் விமானத்தின் சிதைந்த பாகங்களும், மனித உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், விமானம் கடலில் விழுந்து விபத்திற்குள்ளானது உறுதியானது. விமானம் விபத்திற்குள்ளான இடமும் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்நது, விமானிகளின் உரையாடலை சேமித்து வைக்கும் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இதில், விமானத்தின் 2 கருப்பு பெட்டிகளும் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கருப்பு பெட்டியை மீட்கும் நடவடிக்கைகளில், ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மோடி இரங்கல்
இந்தோனேஷிய விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: இந்தோனேஷியவில் எதிர்பாராதவிமாக ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த துக்கமான நேரத்தில், இந்தோனேஷியாவுடன் இந்தியா துணை நிற்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE