மாமல்லபுரம் : மாமல்லபுரத்தை, சர்வதேச சுற்றுலா தரத்தில், ஐகானிக் சிட்டியாக மேம்படுத்த, நில தேர்விற்காக, ஆய்வு நடத்தப்பட்டது.
மாமல்லபுரத்தில், பல்லவர் கால தொல்லியல் சின்னங்களை காண, உள், வெளிநாட்டுப் பயணியர் குவிகின்றனர். சர்வதேச பாரம்பரிய நினைவுச் சின்ன இடமாக விளங்குவதால், பயணியர் வருகை, தொடர்ந்து அதிகரிக்கிறது.இத்தகைய முக்கிய பகுதியில், சர்வதேச தரத்தில், சுற்றுலா வளர்ச்சித் திட்டங்கள் இல்லை. பயணியர் வசதிகளும் குறைவு. இந்நிலையில், மத்திய அரசு, மாமல்லபுரம் உள்ளிட்ட, நாட்டின், 17 சுற்றுலா பகுதிகளை, 2018ல், 'ஐகானிக் சிட்டி' என அறிவித்து, சர்வதேச தரத்தில் மேம்படுத்த, முடிவெடுத்தது.
மத்திய, மாநில சுற்றுலா அமைச்சகங்களின் பங்களிப்புடன், இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, தனியார் நிறுவனங்கள், மாமல்லபுரத்தில் ஆய்வு நடத்தி, விரிவான திட்ட அறிக்கை அளித்தன. எனினும், திட்டத்தை நிறைவேற்றுவது, தொடர்ந்து தாமதமாகிறது. சென்னை உயர் நீதிமன்றம், இவ்வூர் மேம்பாட்டு திட்டங்கள், நிதி ஒதுக்கீடு குறித்து, தொடர்ந்து கேள்வி எழுப்பும் சூழலில், திட்டத்தை செயல்படுத்த, தற்போது, அரசு தீவிரம் காட்டுகிறது.திட்ட அமைவிட பகுதியை தேர்வு செய்ய, சுற்றுலாத் துறை பொது மேலாளர் பாரதி, வருவாய் கோட்டாட்சியர் செல்வம், பேரூராட்சி, உள்ளூர் திட்டக் குழுமம், தொல்லியல், நெடுஞ்சாலை உள்ளிட்ட துறையினருடன், நேற்று முன்தினம் ஆய்வு நடத்தினார்.
என்னென்ன வசதிகள் பயணியருக்கு சுத்திகரிப்பு குடிநீர், நவீன கழிப்பறை, முதலுதவி மையம் உள்ளிட்ட வசதிகள், சாலைகள் விரிவாக்கம், சுற்றுலா வாகனங்களுக்கு, நகர்ப்பகுதி வெளியில், நிரந்தர நிறுத்துமிடம், பயணியர், நகர்ப் பகுதி போக்குவரத்திற்கு, பேட்டரி வாகன இயக்கம், புதிய பஸ் நிலையம், கடற்கரை ஆக்கிரமிப்பு அகற்றி, பாதை உருவாக்கம், கருத்தியல் கண்காட்சி கூடம், கலை நிகழ்வு மையம், நீர்சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு பொழுது போக்குகள் அமைய உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE