சென்னை : சேதமடைந்த சாலையை புனரமைப்பதில், இரண்டு துறை அதிகாரிகள் இடையே எழுந்துள்ள எல்லை பிரச்னையால், விபத்து அபாயம் உருவாகி உள்ளது.
செங்குன்றம் - மூலக்கடை இடையிலான, மாதவரம் நெடுஞ்சாலை, 11 கி.மீ., நீளம் கொண்டது. இந்த சாலை, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், வடகரை பெரியாண்டவர் கோவில் சந்திப்பில் இணைகிறது.மாதவரம் நெடுஞ்சாலை வழியாக கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் அதிகளவில் பயணித்து வருகின்றன. வடகரை சந்திப்பு முதல் மஞ்சம்பாக்கம் நுாறடிச்சாலை சந்திப்பு வரை, மாதவரம் நெடுஞ்சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது.
வடகரை சந்திப்பில், மாதவரம் நெடுஞ்சாலை மட்டுமின்றி, தேசிய நெடுஞ்சாலையிலும், ராட்சத குழிகள் உருவாகி உள்ளன. இதில் குளம்போல தண்ணீர் தேங்கி உள்ளது.இந்த இடத்தை, போக்குவரத்து போலீசார் ஒரு வழிப்பாதையாக மாற்றிஉள்ளனர்.இதனால், மாதவரத்தில் இருந்து வரும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையை அடைவதற்கு வலதுபுறமாகவும், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வரும் வாகனங்கள், மாதவரம் நெடுஞ்சாலையை அடைவதற்கு, இடதுபுறமாகவும் திரும்ப வேண்டியுள்ளது.இந்த இடத்தில், சாலை கடுமையாக சேதம் அடைந்துள்ள நிலையில், அதில் கனரக வாகனங்கள் சிக்கிக்கொள்கின்றன.
ஆட்டோ, கார்கள், டூ - வீலர்களும் பள்ளத்தில் இருந்து வெளியேற முடியாமல் திணறுகின்றன. இதனால், தேசிய நெடுஞ்சாலையிலும், மாதவரம் நெடுஞ்சாலையில் பல கி.மீ., துாரத்திற்கு போக்குவரத்து முடங்கிவிடுகிறது. அதிகம் சேதமடைந்துள்ள பகுதி, மாநில நெடுஞ்சாலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறி, தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் புனரமைப்பு பணியை கிடப்பில் போட்டுள்ளனர்.அந்த சந்திப்பில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தான், சீரமைப்பு பணியை செய்ய வேண்டும் என, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒதுங்குகின்றனர்.
இதனால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை புனரமைப்பு பணிகளை, முறையாக மேற்கொள்ளாததால், சுங்கச்சாவடி கட்டணத்தை, 50 சதவீதம் மட்டுமே வசூலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதேபோன்று சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையை புனரமைக்காததால், இங்குள்ள நல்லுார் சுங்கச்சாவடியிலும், கட்டண குறைப்பை அமல்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE