இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாய் சமீபத்தில் இறந்தார். தாய், மகன் குறித்து, ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரஹானா:
எங்கள் தாய், கரீமா பேகம், உடல்நலக் குறைவால் கடந்த, 28ல், சென்னையில் காலமாயிட்டாங்க. நாங்க, மூணு பொண்ணுங்க, ரஹ்மான் மட்டும் தான் பையன். அம்மாவை விட அப்பா, 12 வயசு பெரியவர். அப்பா இறக்கும்போது அம்மாவுக்கு வயசு, 28 தான்.அடுத்து என்ன செய்யப் போறோம்னு திக்குத் தெரியாத சூழல்ல, எங்க அப்பா விட்டுட்டு போயிருந்த, 'லேட்டஸ்ட் மியூசிக் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்' தான், எங்க அம்மாவுக்கு கைகொடுத்துச்சு.
அப்போ எங்ககிட்ட இருந்தது போல, 'அப்டேட்டான இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்' இங்கே யாருகிட்டேயும் இல்லை. அதை வாடகைக்கு விட்டுத்தான் கொஞ்ச காலம் எங்க குடும்பம் ஓடுச்சு.என்ன தான் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் இருந்தாலும், அதை நிர்வகிக்கிற திறமை வேணும்ல... அந்தக் கருவிகளெல்லாம் அடிக்கடி பழுதாகும். இன்ஜினியரை தேடிப்பிடிச்சு சரி பண்ணணும். இதற்கிடையில பிள்ளைகளையும் பார்த்துகிட்டு குடும்பத்தை நடத்தணும்.
எங்க அம்மா, அதை ரொம்ப சாதுர்யமா பண்ணினாங்க. பல சவால்களை தனிமனுஷியா எதிர் கொண்டவங்க எங்க அம்மா.ரஹ்மானை, 'கீபோர்டு' கத்துக்க அனுப்பினாங்க, அம்மா. அப்போ அவருக்கு, பதிமூணு வயசு; அவர் ஜீனியஸ். குறுகிய காலத்துலயே 'நம்பர் ஒன் கீபோர்டு பிளேயரா' ஆனார்.அதன் பின், நிறைய 'ஜிங்கிள்ஸ்' பண்ணினார். எங்க குடும்பம் பொருளாதார ரீதியா தலையெடுக்க ஆரம்பிச்சது. ரஹ்மான் இசையில இந்தளவுக்கு வளர்ந்திருக்கார்னா அதுக்கு, எங்க அம்மா தான் முழுமுதற்காரணம். அம்மாவுக்கு ஒரு தெய்வீகத்தன்மை இருந்தது. தீர்க்கதரிசியைப் போல எதிர்காலத்தில் நடக்கப் போறதை துல்லியமா கணிச்சிருவாங்க.
அவங்க எடுக்கும் முடிவு, 90 சதவீதம் சரியா இருக்கும். ரஹ்மானுக்கு எலக்ட்ரானிக் இன்ஜினியர் ஆகணும்னு தான் விருப்பம்.'இல்லை... 'மியூஸிக்' தான் உன்னுடைய பாதை'ன்னு அம்மா தான் திட்டவட்டமா சொன்னாங்க. அவங்க அப்போ அந்த தீர்க்கமான முடிவெடுக்கலைன்னா, இன்னைக்கு இசைப் புயலா அவர் உருவாகியிருப்பாரான்னு தெரியலை.
எங்க அம்மா எங்களுக்காக நிறைய தியாகம் செஞ்சிருக்காங்க. ஆனா, அவங்களுக்கு, ரஹ்மான் தான் மெயின்; அவருக்கு பின் தான் நாங்களெல்லாம். காரணம், நாங்களெல்லாம் அப்பா இல்லாத வலி தெரியாமலே வளர்ந்தோம். அந்த வலிகளை மொத்தமா சுமந்தது ரஹ்மான் தான். அதனால தான் அம்மா, ரஹ்மான் தான் உலகம்னு இருப்பாங்க. எந்நேரமும் ரஹ்மானுக்காக பிரார்த்தனை செஞ்சுகிட்டே இருப்பாங்க. ரஹ்மானுக்கும் அம்மா தான் உலகம். அவரும், அம்மாவும் பரஸ்பரம் வெச்சுருந்த பாசம் ரொம்ப ரொம்ப ஆழமானது!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE