வாஷிங்டன்: அமெரிக்காவில், 'கேப்பிடோல்' எனப்படும் பார்லிமென்ட் வளாகத்தில் நடந்த வன்முறையில் பங்கேற்ற, அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவாளரான, மாகாண சபை உறுப்பினர், தன் பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்தாண்டு, நவ.,ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வென்றார். வரும், 20ல், அவர் பதவியேற்க உள்ளார். இந்நிலையில், தேர்தல் முடிவுகளை அங்கீகரிப்பதற்காக, பார்லிமென்ட் கூட்டுக் கூட்டம் சமீபத்தில் நடந்தது.அப்போது, அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த, டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்கள், பார்லிமென்ட் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டனர். அதில், ஐந்து பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.வன்முறையில் ஈடுபட்டதாக, 50க்கும் மேற்பட்ட டிரம்ப் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மேற்கு விர்ஜினியா மாகாண சபை உறுப்பினரான, குடியரசு கட்சியை சேர்ந்த, டெரிக் இவான்ஸ், 35, மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டதோடு, அதை சமூக வலைதளத்தில் நேரடியாகவும் அவர் ஒளிபரப்பினார். இந்த வழக்குகளில், அவருக்கு, ஒன்றரை ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். மாகாண கவர்னர் ஜிம் ஜஸ்டிசை சந்தித்து, தன், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார், டெரிக் இவான்ஸ்.இவரை தவிர, வேறு சில மாகாண சபை உறுப்பினர்களும், பார்லி.,க்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் குறித்த தகவல்களை திரட்டப்பட்டு வருகின்றன.டெரிக் இவான்ஸ் உடன் புகைப்படம் எடுத்து, அதை சமூக வலைதளத்தில் வெளியிட்ட மேலும் இருவர் மீது, மேற்கு விர்ஜினியா மாகாண போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பதவி நீக்க ஆதரவு
'பார்லி., மீதான வன்முறை தாக்குதல் நடத்த துாண்டியதால், டொனால்டு டிரம்பை, அதிபர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என, ஜனநாயகக் கட்சி, எம்.பி.,க்கள் பலர் மனு கொடுத்துள்ளனர். குடியரசு கட்சியைச் சேர்ந்த, மூத்த, எம்.பி.,யான பால் டோமியும், பதவியில் இருந்து டிரம்பை நீக்க ஆதரவு தெரிவித்துள்ளார்.சமூக வலைதளங்கள் அதிரடிவன்முறையை துாண்டும் வகையில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டதால், அதிபர் டிரம்பின் கணக்கை, 'டுவிட்டர்' சமூக வலைதளம் முடக்கியது. இதையடுத்து, குடியரசு கட்சியைச் சேர்ந்தவர்கள், 'பார்லர்' எனப்படும் சமூக வலைதளத்தில் இணைந்து வருகின்றனர்.டிரம்ப் ஆதரவாளர்கள் தொடர்ந்து, ஆட்சேபகரமான செய்திகளை வெளியிடுவதால், பார்லர் சமூக வலைதளத்தை, தன் மொபைல் போன்களில் இருந்து நீக்கி, ஆப்பிள் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேபோல், அமேசான் நிறுவனமும், பார்லர் செயலியை, தன் தொகுப்பில் இருந்து நீக்கியுள்ளது.'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்கள், டிரம்பின் கணக்கை முடக்கி வைத்துள்ளன. தற்போது, பார்லர் சமூக வலைதளத்துக்கு, பல்வேறு மொபைல் போன் சேவை நிறுவனங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளன. இந்நிலையில், தனக்காக புதிய சமூக வலைதளத்தை உருவாக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதற்கு சாத்தியம் மிகவும் குறைவாகவே உள்ளதாக, தொழில்நுட்ப நிபுணர்கள் கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE