சென்னை:''தேர்தல் முடிவுகள், மக்கள் நீதி மையத்திற்கு சிறப்பாக இருக்கும்,'' என, அக்கட்சியின் தலைவர் கமல் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:'அரசியலுக்கு வருவதில்லை' என, ரஜினி எடுத்த முடிவு, அவரது தனிப்பட்ட விருப்பம்; இதில், நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம், மக்களிடம் வரவேற்புள்ளது. நாங்கள் திட்டமிடாத இடத்தில் எல்லாம், மக்கள் கூட்டமாக திரள்கின்றனர். வழக்கமாக, அரசியல்வாதிகள் மக்களுக்கு வாக்குறுதி அளிப்பர்; தற்போது, எங்களுக்கு மக்கள் வாக்குறுதி அளிக்கின்றனர்.
இதனால், தேர்தல் முடிவுகள், மக்கள் நீதி மையத்திற்கு சிறப்பாக இருக்கும்.திரையரங்குகளில், 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, '2 ஜி.பி.,' இலவச டேட்டா போன்றவை, தமிழக அரசின் நல்ல முடிவுகள். தமிழக அரசு வெற்றிநடை போட்டிருந்தால், நாங்கள் எல்லாம் அரசியலுக்கு வந்திருக்கவே மாட்டோம்.இவ்வாறு, கமல் கூறினார்.
பிரசார பயணம் மேற்கொள்ள, கோவைக்கு சென்ற, மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல், நிருபர்களிடம் கூறியதாவது: ஐந்தாம் கட்டமாக, கோவையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன். இதுவரை நான் சென்ற அனைத்து இடங்களிலும், நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது, கோவையிலும் அதேபோன்று வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதை பார்க்கும் போது, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., எங்களுக்கு வழிவிடுவது போல தெரிகிறது.
இந்த பிரசார பயணத்துக்காக, பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட எங்களின் கட்சி கொடி மற்றும் பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன. எங்களுக்கு பொதுமக்களிடம் கூடுதல் விளம்பரம் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். இதற்காக, அமைச்சர்களுக்கும், உடனிருந்து பணியாற்றிய மாநகராட்சி அதிகாரிகளுக்கும் நன்றி. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE