சென்னை:''உயர்கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும், தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க அரசு உறுதி பூண்டுள்ளது,'' என, துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசினார்.
சென்னை, ஏ.சி.எஸ்., கல்வி குழுமத்தின், டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின், 29வது பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. பல்கலை வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமை வகித்தார்.விழாவில், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது:எம்.ஜி.ஆரின் தொலைநோக்கு பார்வையால், தமிழகம் இன்று, உயர்கல்வித் துறையில் சிறந்து விளங்குகிறது.
உயர்கல்வித் துறையில், மாணவர் சேர்க்கை விகிதம், 49 சதவீதத்திற்கும் மேல் உள்ளது. தமிழகத்தில், உயர்தரமான மனித வளங்கள் உள்ளன.தமிழக அரசு, உயர் கல்வி உட்பட அனைத்து துறைகளிலும், தமிழகத்தை, நாட்டிலேயே முதன்மை மாநிலமாக்க உறுதி பூண்டுள்ளது.முந்தைய காலங்களில், கல்வி என்பது வேலையை தேடுவதற்கான தகுதியை கொடுப்பதாக இருந்தது. இன்று, கல்வியால் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
வேலை தேடுபவர்களை உருவாக்காமல், வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோரை உருவாக்க வேண்டும். இந்த கல்வி நிறுவனம், இதை நோக்கமாக கொண்டுள்ளது.எங்கிருந்து, எந்த வகையில் சவால்கள் வந்தாலும், அதை எதிர்கொண்டு சமாளித்து வெற்றி பெறுகிற மாணவ செல்வங்களாகவே, உங்களை காண்கிறேன்.
இன்று நீங்கள் பெற்றிருக்கும் பட்டம், உங்களை யார் என்று உலகிற்கு காட்டுகின்ற கண்ணாடி. உங்கள் அறிவு திறனுக்கு ஓர் அடையாளம். இந்த நாட்டை வளப்படுத்த, உங்கள் கரங்களில் வழங்கப்பட்டிருக்கும் ஆயுதம். இதன் வாயிலாக நீங்களும் வளம் பெற்று, இந்த நாட்டையும் வளப்படுத்தி, புதியதோர் சமுதாயம் படைத்திட வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், பல்கலை தலைவர் ஏ.சி.எஸ்.அருண்குமார், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை முன்னாள் துணை வேந்தர் கீதாலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE