சென்னை: ''அ.தி.மு.க.,வை நிராகரிக்கிறோம் என்ற மனநிலைக்கு, ஒரு கோடி பேர் தள்ளப்பட்டு உள்ளனர்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை, ராயபுரத்தில், தி.மு.க., சார்பில், மக்கள் வார்டு சபை கூட்டம், நேற்று நடந்தது. இதில், ஸ்டாலின் பேசியதாவது:கிராம சபை கூட்டத்தால், சட்டம் - ஒழுங்கு சீர்கெடவில்லை. இரு ஆண்டுகளுக்கு முன், பொள்ளாச்சியில் அரங்கேறிய, பாலியல் வன்கொடுமையில், 250க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து, முதலில் குரல் கொடுத்தது, தி.மு.க., தான்.
இந்த வழக்கில், அ.தி.மு.க., மாணவரணி நிர்வாகியும் கைதாகியுள்ளார். மேலும், அமைச்சர்களின் மகன்களுக்கும் தொடர்பு உள்ளது. எனவே, அவர்களை விரைந்து கைது செய்யக்கோரி, கனிமொழி தலைமையில் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு சென்றவர்களை, போலீசார் ஆங்காங்கே நிறுத்தியுள்ளனர்.கனிமொழி என்னிடம் தகவல் தெரிவித்த போது, 'தடையை மீறி செல்லுங்கள்' என்றேன். அனுமதி பெற்று நடக்கும் போராட்டத்திற்கு மறுத்தால், அனுமதியின்றி தமிழகத்தில், பல போராட்டங்கள் நடக்கும்.அடுத்த நான்கு மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும். 20 ஆயிரம் கிராம சபை கூட்டங்கள் வாயிலாக, நேரிடையாக, 80 லட்சம் பேர்; 'ஆன்லைன்' வழியாக, 20 லட்சம் பேர் என, ஒரு கோடி பேர், அ.தி.மு.க.,வை நிராகரிக்கிறோம் என்ற மனநிலைக்கு வந்து விட்டனர்.இவ்வாறு, அவர் பேசினார்.
'பெண்கள் போகட்டும்'
* மக்கள் வார்டு சபை கூட்டம் முடிந்த பின், ஸ்டாலின் தன் பிரசார வாகனத்தில் புறப்பட்டார். சிறிது துாரத்தில், சட்டையின் உள்பையில் இருந்து, மின் சாதன கருவி போன்ற ஒன்றை எடுத்து, பின்னால் அமர்ந்திருந்தவரிடம் கொடுத்தார். அந்த மின் சாதன கருவி என்ன என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது
* நிகழ்ச்சி நடைபெற்ற தனியார் பள்ளி வளாகத்தின் முகப்பில், அலங்காரத்திற்காக, கரும்பு மற்றும் வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. நிகழ்ச்சி முடிந்து திரும்பிய பெண்கள், கரும்பையும், வாழை தாரையும், முட்டி மோதியபடி எடுத்துச் சென்றனர். இதனால், சிறிது சலசலப்பு ஏற்பட்டது
* சரியாக காலை, 10:30 மணிக்கு, ஸ்டாலின் வந்தார். அதற்குள், வெயில் கடுமையாக அடிக்க துவங்கியதால், கைகுழந்தைகளுடன் வெட்ட வெளியில் உட்கார்ந்திருந்த பெண்கள், திடீரென கலைய துவங்கினர். 'வெயில் அதிகம் இருப்பதால், கிளம்பி செல்லும் பெண்களுக்கு வழி விடுங்கள்' என, ஸ்டாலினே மைக்கில் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE