ஸ்ரீவில்லிபுத்துார்: ''ராஜபாளையம் சட்டசபை தொகுதியில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கவில்லை,'' என பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் நடிகை கவுதமி கூறினார்.
விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்துாரில், பா.ஜ., சார்பில் பொங்கல் விழா, நடிகை கவுதமி தலைமையில் நடந்தது. அப்போது, அவர் கூறியதாவது:கூட்டணி என்பது அனைவரும் ஒருங்கிணைந்து, கைகோர்த்து, ஒரே ஒரு கொள்கையை நோக்கி பயணிக்க வேண்டும். இதில், யார் யார் மீதுசவாரி செய்கின்றனர் என்பது முக்கியமல்ல. முதல்வர் பதவி குறித்து,
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து இருக்கும். கூட்டணி முடிவாகும் போது தெளிவு பிறக்கும். சசிகலா வந்தால் கூட்டணி மாறுமா என, வரும், 27க்கு பின் பார்ப்போம். எனக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பு பணிகளை, கிராமம் தோறும் செய்து வருகிறேன்.ராஜபாளையத்தில் போட்டியிடுவது குறித்த முடிவு, இன்னும் எடுக்கப்படவில்லை.
சமூக வலைதளத்தில் வெளியான வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமானதல்ல. பா.ஜ.,விற்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து, ரஜினி தான் முடிவு சொல்ல வேண்டும்.தமிழகத்தில், திராவிட கட்சிகளுக்கு மட்டுமே செல்வாக்கு இருக்கிறது என்பது உண்மையல்ல. பா.ஜ.,விற்கு அதிகளவில் மக்களிடம் வரவேற்பு இருக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE