பொள்ளாச்சி: ''தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பொள்ளாச்சி பாலியல் வழக்கில், தொடர்பு உடையவர்களுக்கு தகுந்த பாடம் கற்றுத் தரப்படும். யாராக இருந்தாலும், நீதியின் முன் நிறுத்தப்படுவர்,'' என, மகளிரணி செயலர் கனிமொழி பேசினார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், பொள்ளாச்சி காந்தி சிலை முன், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், கனிமொழி பேசியதாவது:பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதை, ஆளுங்கட்சியினர் தடுக்க முயன்றனர். தமிழகம் முழுதும் போராட்டம் நடத்துவோம் என, எச்சரிக்கை விடுத்ததால் அனுமதித்தனர்.ஆளுங்கட்சி நிர்ப்பந்தம் காரணமாக, பாலியல் வழக்கு விசாரணை தாமதமாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பின், தற்போது அ.தி.மு.க.,வை சேர்ந்த அருளானந்தம், பாபு, ஹெரன்பாலை கைது செய்தனர்.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பாலியல் வழக்கில் தொடர்பு உடையவர்களுக்கு தகுந்த பாடம் கற்றுத் தரப்படும். யாராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்படுவர்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க, தனி நீதிமன்றம் அமைக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.சாலை மறியல்பொள்ளாச்சி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க, கனிமொழி தி.மு.க., நிர்வாகிகளுடன், 15க்கும் மேற்பட்ட கார்களில், கோவை நீலம்பூர் -- மதுக்கரை பை-பாஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். ஈச்சனாரி அருகே, வாகனங்களை போலீசார் தடுப்பு ஏற்படுத்தி, மறித்தனர்.
தி.மு.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தடுப்புகளை அகற்ற முற்பட்டதால், 'தள்ளுமுள்ளு' ஏற்பட்டது. கனிமொழியும் காரிலிருந்து இறங்கி சென்று, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்.சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். போலீசாரை கண்டித்து, கோஷமிட்டனர். பின், பொள்ளாச்சி செல்ல அனுமதித்தனர். இதனால், பிரச்னை முடிவுக்கு வந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE