சென்னை: ''அனைத்து ரேஷன் கடைகளிலும், பனை உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய அரசு பரிசீலிக்கும்,'' என, முதல்வர் இ.பி.எஸ்., பேசினார்.
தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பில், சாதனையாளர் விருது வழங்கும் விழா, சென்னை மாங்காடில் நேற்று நடந்தது. இந்த விழாவில், முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:நாட்டின் விடுதலை போரில், திருப்புமுனைகளுக்கு எல்லாம் இருப்பிடம் கொடுத்த, தியாகங்களின் வழித்தோன்றல்கள், மொழி, இனத்தின் மீது அளவற்ற பற்று கொண்டவர்கள் நாடார் சமூகத்தினர்.உழைத்து வாழும் சமுதாயத்தினராக திகழ்கின்றனர்.
கல்வி, சமூக சேவை, வணிகம், பத்திரிகை, அச்சுத்துறை, அரசியல் என, பல துறைகளிலும் தங்கள் உழைப்பால், உச்சங்களை தொட்ட வியர்வை செலவாளிகளாகவும், நாடார் சமுதாயம் உயர்ந்து நிற்பதை கண்டு பெருமைப்படுகிறேன்.மதுரை காமராஜர் பல்கலையில், காமராஜர் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என, ஏற்கனவே, அரசால் அறிவிக்கப்பட்டு விட்டது.
பனையில் இருந்து கிடைக்கும் பதனீர் வாயிலாக, கற்கண்டு, பனை வெல்லமான கருப்பட்டி போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, அனைத்து ரேஷன் கடைகளிலும், பனை உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய அரசு பரிசீலிக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE