பெரியகுளம்: வடுகபட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் உடல், 21 குண்டுகள் முழங்க, அவரது சொந்த ஊரில் நேற்று தகனம் செய்யப்பட்டது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே, வடுகபட்டியைச் சேர்ந்த குருசாமி, முத்துலட்சுமி மகன் ஆறுமுகம், 38. கடந்த, 18 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். சமீபத்தில், ஜம்மு - காஷ்மீரில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், நாயக் பணியில் இருந்த போது, தீ விபத்தில் படுகாயம் அடைந்தார்.ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர், ஜன., 8ல் மரணம் அடைந்தார்.
அவரது உடல், நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு வடுகபட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தது.திருச்சி பட்டாலியன் கேப்டன் அக் ஷய் பஞ்ச் மரியாதை செலுத்தினார். 24 ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு நடத்தினர். ஆறுமுகத்தின் தாய், மனைவி பாண்டிராணி, 32, மகள் ஜெயஸ்ரீ 12, மகன் பாலசபரிகுரு, 7, உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர்.வீட்டில் இருந்து சுடுகாடு வரை, ராணுவ வாகனத்தில் உடல் எடுத்து வரப்பட்டது.
சுடுகாட்டில், கலெக்டர் பல்லவிபல்தேவ், எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி, அரசியல் கட்சியினர், ஊர்மக்கள் மரியாதை செலுத்தினர்.மகன் பாலசபரிகுரு இறுதிச் சடங்கு செய்தார். காலை, 9:40 மணிக்கு ஆறுமுகம் உடல், தகனம் செய்யப்பட்டது. ராணுவ வீரர்கள், வானத்தை நோக்கி, 21 குண்டுகளை சுட்டு மரியாதை செலுத்தினர். ஆறுமுகம் குடும்பத்தினர் சார்பில், அரசு வேலை பெற்றுத் தருமாறு கோரினர். 'அரசு விரைவில் நிறைவேற்றும்' என, கலெக்டர் பல்லவிபல்தேவ் ஆறுதல் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE