கோவை:பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தில், கோவையில் ஒரு சில ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். விசாரித்தபோது, பலருக்கு முழு கரும்பு கிடைக்கவில்லை; ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகியவை குறைவாகவே வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது. தமிழக அரசு நடப்பாண்டுக்கான பொங்கல் பரிசு தொகையை, ரூ.2500 ஆக உயர்த்தியுள்ளது.
இத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஒரு நல்ல துணிப்பை ஆகியவை, தொகுப்பாக வழங்கப்படும் என அரசு அறிவித்தது. கோவையில், 1400 ரேஷன் கடைகளில் உள்ள, 10 லட்சத்து 11 ஆயிரத்து 845 ரேஷன் அட்டைகளுக்கு, 16.87 கோடி ரூபாய் மதிப்பில் பொருட்களும், ரூ.2500 வீதம் மொத்தம், 252.96 கோடி ரூபாய் ரொக்க பரிசாகவும் வழங்க நிதி ஒதுக்கப்பட்டது.கடந்த, 4ம் தேதி முதல் வினியோக பணிகள் துவக்கப்பட்டு, தற்போது வரை 80 சதவீதத்திற்கும் மேல் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில், ஒரு சில கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். ஒரு சில கடைகளில் முழு கரும்பு வழங்கப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது. வினியோக பணி துவங்கி இரண்டு நாட்கள், முந்திரி, ஏலக்காய், திராட்சை தனித்தனியாக குறிப்பிட்ட அளவு எடையில், தனி 'கவர்களில்' வழங்கப்பட்டது. அதன்பின் மொத்தமாக முந்திரி, திராட்சை, ஏலக்காய் மூன்றையும் ஒருங்கிணைத்து, ஒரே 'கவரில்' 15 கிராம் கூட வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது. பீளமேடு பகுதியை சேர்ந்த மாணிக்கம் கூறுகையில், ''பீளமேடு அகிலாண்டேஸ்வரி கோவில் அருகில் உள்ள ரேஷன் கடையில், நேற்று பொங்கல் தொகுப்பை பெற்றேன். கரும்பு இல்லை என்று கூறி விட்டனர்.
வந்தவர்களுக்கு பிற பொருட்களை மட்டும் வழங்கினர். தொகுப்பில், முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஒன்றாக சேர்த்து வழங்கியதில் மொத்தம், 15 கிராம் மட்டுமே எடை இருந்தது. இது குறித்து கேட்டதற்கு, 'இவ்வளவு தான் வந்தது...நாங்கள் என்ன செய்வது' என ஊழியர்கள் தெரிவித்தனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்,'' என்றார்.
இது குறித்து, மாவட்ட வழங்கல் துறை அலுவலர் குமரேசனிடம் கேட்டபோது, ''கோவையில் இன்று(நேற்று) மதியம் வரை, 95 சதவீதம் பொங்கல் பரிசு வினியோகித்துள்ளோம். இதுபோன்ற ஒரு புகார், பொதுமக்கள் தரப்பில் இருந்து பெறப்படவில்லை. சம்மந்தப்பட்ட கடையில் விசாரிக்கிறேன்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE