ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே இரண்டு ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீ நெடுஞ்சேரி பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தனியாருக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்தது. இதனையடுத்து, ஸ்ரீநெடுஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட சேல்விழி கிராமத்தில் நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ. 35 லட்சம் மதிப்பில் நேரடி நெல்கொள்முதல் நிலையத்திற்கு புதிய கட்டடம் கடந்த 2019ல் கட்டப்பட்டது.
கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டு சம்பா பருவத்திற்கே நெல்கொள்முதல் நிலைய கட்டடம் திறக்கப்படும் என, விவசாயிகள் எதிர்பார்த்தனர்.ஆனால் புதிய கட்டடத்தில் மின்சார வசதி இல்லாததால், திறக்கப்படவில்லை.இதற்கிடையே ஏற்கனவே தனியார் இடத்தில் செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையமும் கடந்த குறுவை பட்டத்தின் போது திறக்கப்படவில்லை.
இதனால் ஸ்ரீநெடுஞ்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதி விவசாயிகள், அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய தேத்தாம்பட்டு, அம்புஜவல்லிப்பேட்டை பகுதிகளுக்கு செல்லவேண்டி உள்ளது. இங்கு பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால், விவசாயிகள் அவதிப்பட்டனர்.இந்நிலையில் தற்போது சம்பா பட்ட அறுவடை சீசன் துவங்க உள்ள நிலையில், இப்பகுதி விவசாயிகளின் நலன் கருதி, புதிதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு மின்சார வசதி செய்துகொடுத்து, திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE