விருத்தாசலம் : விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் இணைப்பு சாலை உள்வாங்கியதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் இணைப்பு சாலை வழியாக எருமனுார், தொட்டிகுப்பம், ரெட்டிகுப்பம், கலர்குப்பம், எம்.பரூர், எம்.புதுார், எம்.பட்டி உட்பட இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைகின்றனர்.இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் நெல், உளுந்து, வேர்க்கடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட விளைபொருட்கள் டிராக்டர், டாடா ஏஸ் வேன்களில் எடுத்து செல்லப்படுகின்றன.
இந்த சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்ததால், கிராம மக்கள் மிகுந்த சிரமமடைந்தனர்.இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 1.25 கோடி ரூபாய் மதிப்பில், ரயில்வே ஜங்ஷனில் இருந்து எருமனுார் செல்லும் இணைப்பு சாலை போடப்பட்டது.
ஆனால், தொடர் மழை காரணமாக இந்த சாலை உள்வாங்கியது. மழைநீர் ஆங்காங்கே தேங்கியதால் சாலை பெயர்ந்து, குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியது.இதனால் இரவு நேரத்தில் இவ்வழியே இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.எனவே, விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் - எருமனுார் இணைப்பு சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE