விக்கிரவாண்டி : 'டோல்பிளாசாக்களை கடந்து செல்லும் வாகனங்களுக்கு, பிப். 15ம் தேதி முதல் 'பாஸ்டேக் கட்டாயம். அன்று முதல் ரொக்கமாக சுங்க கட்டணம் செலுத்தி கடந்து செல்ல முடியாது' என 'நகாய்' அறிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு பலகை, விக்கிரவாண்டி டோல்பிளாசாவில் வைக்கப்பட்டுள்ளது.இந்தியா முழுதும் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் டோல் பிளாசாவை கடக்கும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்தும் வகையில், 'பாஸ்டேக்' வசதி கட்டாயம் என நகாய் அறிவித்திருந்தது.இதையடுத்து, தமிழகத்தில் 75 சதவீத வாகனங்கள் 'பாஸ்டேக்' திட்டத்திற்கு மாறிய நிலையில், 25 சதவீத வாகனங்கள் ரொக்கமாக கட்டணம் செலுத்தி டோல்பிளாசாவை கடந்து செல்கின்றன.
டோல்பிளாசாவில் மொத்தமுள்ள 12 வழிகளில் (சென்னை-திருச்சி) இரு புறமும் கட்டணம் செலுத்தி செல்ல ஒரு வழியும், 5 வழிகள் பாஸ்டேக் வழியாகவும் மாற்றப்பட்டுள்ளன. தற்போது, டோல் பிளாசாவில் பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் பாஸ்டேக் வழியில் பயணித்தால் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப் பட்டு வருகிறது
கொரோனா தொற்று பரவல் காரணமாக, 25 சதவீத வாகன உரிமையாளர்கள் பாஸ்டேக் திட்டத்திற்கு மாற முடியவில்லை என கருதிய நகாய், வரும் பிப். 14ம் தேதி வரை தளர்வு அறிவித்தது.இந்நிலையில் நேற்று நகாய் சார்பில், 'டோல் பிளாசாவில் வரும் பிப். 15ம் தேதி முதல் அனைத்து வழிகளிலும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம், அனைத்து வழிகளும் பாஸ்டேக் வழியாக மாற்றப்படும்.
பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வாகன ஓட்டிகள் செலுத்த வேண்டும்' என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். வரும் 15ம் தேதி முதல் ரொக்கமாக கட்டணம் செலுத்தி செல்ல முடியாது எனவும் அறிவித்துள்ளது.பாஸ்டேக் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE