பல்லடம்:ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, பல்லடத்தில், வரும் பிப்., 8 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட, இத்திட்ட போராட்டக்குழு முடிவெடுத்துள்ளது.பல்லடம் ராயர்பாளையத்தில், ஆனைமலை-யாறு - நல்லாறு திட்டம் குறித்த, விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.''கடந்த 30 ஆண்டுகளாக, ஆனைமலை-- நல்லாறு திட்டம் வெறும் கோரிக்கையாக மட்டுமே இருந்து வருகிறது. விவசாயிகள் அனைவரும் ஒருங்கிணைந்து போராடினால் மட்டுமே இத்திட்டத்தை அமலுக்கு கொண்டுவர வைக்க முடியும். அரசுக்கு சாதகமான திட்டங்கள் மட்டுமே உடனடியாக செயல்படுத்தப்படுகின்றன.ஆனைமலை -- நல்லாறு திட்டம் குறித்த விழிப்புணர்வு கிராம மக்களிடம் போதாது. விவசாயிகள் பொதுமக்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியம். கட்சி பாகுபாடு கருதாமல் அவிநாசி - அத்திக்கடவு திட்டம் போன்ற போராட்டத்தை கையில் எடுக்க வேண்டும்'' என, ஆனைமலையாறு - நல்லாறு திட்ட போராட்ட குழுவினர் பேசினர்.ஆனைமலை -நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி ஊராட்சி தலைவர்களை சந்தித்து பேசி கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற வைத்தல், திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தி, பிப்., 8 முதல் பல்லடத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துதல் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE