கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, ஆண்டிபாளையத்தில் பாரம்பரியமான சுண்ணாம்பு சூளைகள் தொடர்ந்து செயல்பட அரசு நிதியுதவி கிடைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கிணத்துக்கடவு, ஆண்டிபாளையத்தில், கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், எட்டு சுண்ணாம்பு சூளைகள் செயல்பட்டு வந்தன. இந்த சூளைகளுக்கு, காமநாயக்கன்பாளையத்தில் இருந்து ஒரு டன் ஓடக்கல் ஆறாயிரம் ரூபாய்க்கு வாங்கப்படுகிறது.சூளைகளில் வெப்பம் தொடர்ந்து இருப்பதற்காக ஒரு டன் நிலக்கரி ஆறாயிரம் ரூபாய்க்கும், ஆயிரம் தென்னை மட்டைகள் இரண்டாயிரம் ரூபாய்க்கும் வாங்கப்படுகிறது.ஒரு சூளைக்கு ஆறு ஆட்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு ஒரு நாள் கூலியாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.தினமும், சுண்ணாம்பு சூளையில் ஒரு டன் ஓடக்கல்லை உடைத்து, நிலக்கரி மற்றும் தென்னை மட்டைகள் போடப்பட்டு சூடுபடுத்தப்படுகிறது. ஓடக்கல் வெந்து வெளியே வருவதற்கு, 24 மணிநேரம் ஆகிறது. அதன் பின், சூளையின் கீழ்பகுதியில் சுண்ணாம்பு கற்களை எடுத்து, உலர்ந்த பின், 20 கிலோ பைகளில் நிரப்பி வைக்கப்படுகிறது.ஒரு கிலோ சுண்ணாம்பு நான்கு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சுண்ணாம்பு கற்களை மாட்டுக்கும், கோழிப்பண்ணைக்கும் விவசாயிகள் வாங்கி செல்கின்றனர்.மேலும், சுண்ணாம்புக்கல் கிருமிநாசினியாக செயல்படுவதாலும், பொங்கல் பண்டிகை வருவதை ஒட்டியும் சுண்ணாம்புக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.ஆனால், இந்த தொழிலில் லாபம் கிடைக்காததால், ஏழு சுண்ணாம்பு சூளைகள் செயல்படவில்லை. தற்போது, ஒரே ஒரு சுண்ணாம்பு சூளை மட்டுமே செயல்படுகிறது.சுண்ணாம்பு சூளை உரிமையாளர் பாபு கூறியதாவது:ஒரு நாளைக்கு, 18 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால், சுண்ணாம்பு கற்களுக்கு பெரிதாக விலையில்லை. கட்டுமான தொழில் செய்வதால், சுண்ணாம்பு கற்கள் தேவையுள்ளது. வெளியே சுண்ணாம்பு கற்கள் வாங்குவதற்கு பதிலாக, உற்பத்தி செய்து பயன்படுத்துகிறேன்.மேலும், பெங்களூரு, மைசூரு பகுதிகளில் கட்டப்படும் கட்டடங்களுக்கு, வெள்ளை அடிக்க சுண்ணாம்பு கற்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால், சுண்ணாம்பு கற்கள் தேவையும் உள்ளதால், இந்த தொழிலை பாதுகாக்க அரசு நிதியுதவி அளிக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE