அன்னுார்:அவிநாசி தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க.,வினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.அன்னுார், அவிநாசி ஒன்றியங்கள் அடங்கிய அவிநாசி தொகுதியில், 1980 முதல் நடந்த பொது தேர்தல்களில், 96ல் மட்டும் தி.மு.க., வெற்றி பெற்றது. மற்ற எட்டு தேர்தல்களிலும், அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள்தான் வெற்றி பெற்றன.இதையடுத்து அவிநாசி தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க.,வினர் மத்தியில் அதிக போட்டி நிலவுகிறது. சபாநாயகரும், அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ., வுமான தனபால் மீண்டும் போட்டியிட உள்ளார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். வழக்கமாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, அன்னுாருக்கு வரும் தனபால், கடந்த இரண்டரை மாதங்களில், நான்கு முறை, அன்னுார் வந்து சென்றுள்ளார்.மாவட்ட ஊராட்சி துணைத் தலைவரும், அ.தி.மு.க.,வின் இளைஞரணி மாநில துணைச் செயலாளருமான அமுல் கந்தசாமி, அமைச்சர் மூலம் எப்படியாவது அவிநாசி தொகுதியில் போட்டியிட சீட் வாங்கிவிட வேண்டுமென்று முயற்சி செய்து வருகிறார்.கடந்த 2011--16ல் இந்த தொகுதி எம்.எல்.ஏ., வாக இருந்த கருப்பசாமி மீண்டும் போட்டியிட ஆர்வமாக உள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ., பிரேமா, நீலகிரி தொகுதியில் எம்.பி., தேர்தலில் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த தியாகராஜன் ஆகியோரும் ஆர்வம் காட்டுகின்றனர்.கஞ்சப்பள்ளி ஊராட்சித் தலைவரும், அ.தி.மு.க., ஒன்றிய இணைச் செயலாளருமான சித்ரா சீட்டு பெற ஆர்வம் காட்டி வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE