குன்னுார்:குன்னுார் அருகே நான்கு பேர் மர்மமான முறையில் இறப்பதற்கு முன், எட்டு வயது சிறுமி மாயமானார். அவரை தேடும் பணியில், நேற்று, 100 போலீசார் ஈடுபட்டனர்.நீலகிரி மாவட்டம், குன்னுார் கொலக்கம்பை கிரேக்மோர் எஸ்டேட் குடியிருப்பில், ஜார்கண்ட் மாநில தொழிலாளி ஒருவரின், எட்டு வயது மகள், கடந்த, 21ம் தேதி மாயமானார். இதே பகுதியில், கடந்த 6ம் தேதி, ஜார்கண்ட் தொழிலாளி அசோக் பகத் துாக்கில் தொங்கிய நிலையிலும், மனைவி, இரு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட நிலையிலும் காணப்பட்டனர்.இந்த இரு சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மாயமான சிறுமியின் விபரம் தெரிந்தால் மட்டுமே, இந்த கொலைக்கு காரணம் தெரியவரும் என்பதால், போலீசார் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையில், ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலக்கம்பை, கிரேக்மோர் பகுதியில், 3 கி.மீ., சுற்றளவில், 100 போலீசார் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.எஸ்.பி., சசிமோகன் கூறுகையில், ''கிரேக்மோர் தொழிலாளர் குடியிருப்பில், மனைவி, இரு குழந்தைகளை கொன்று அசோக் பகத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். வீட்டில் கிடைத்த கடிதத்தில், ஒன்பது பேரின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. அசோக்பகத் எழுதிய கடிதம் தானா என குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நபர்களிடம் விசாரணையும் நடந்து வருகிறது. மோப்ப நாய் சென்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, காணாமல் போன சிறுமி குறித்த தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE