பேரூர்:மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங்குடன் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கலந்துரையாடினார்.இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் சார்பில், 'உள்நிலை விஞ்ஞானம் மற்றும் நல்வாழ்வுக்கான தொழில்நுட்பங்கள்' என்ற தலைப்பில் நடந்த ஆன்லைன் கலந்துரையாடலில், சத்குரு, மத்திய அறிவியல் மற்றும் அணுசக்தி துறை இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி பண்டாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அதில், சத்குரு பேசுகையில், ''நம் நாட்டில் ஒருங்கிணைக்கப்பட்ட மதம் என ஒன்றோ, முட்டாள்தனமாக அனைத்தையும் நம்பும் முறைகளோ கிடையாது. நாம் எல்லாவற்றையும் தேடி உணரும் ஆன்மிக முறையில் வந்தவர்கள். உள்நிலை தேடல் மட்டுமே, நம் இயல்பாக இருக்கிறது. அனைத்து உயிர்களையும் சமமாக பார்க்கும் நம்முடைய கலாசாரம், எதிர்கால உலகிற்கான முன்மாதிரியாக மாற வேண்டும். அதற்கு, இந்தியா உலகின் கலாசார தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும்,'' என்றார்.மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் பேசுகையில், ''கைகளை சுத்தம் செய்தல், இருகரம் கூப்பி வணங்குதல் போன்ற இந்திய பாரம்பரிய முறைகளை கொரோனா நமக்கு கற்றுக்கொடுத்துள்ளது. சமூக இடைவெளி, துாய்மை, யோகா, ஆயுர்வேதம் மற்றும் இதர பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்த விழிப்புணர்வை, உலகளவில் ஏற்படுத்தியுள்ளது. இந்திய ஆன்மிக முறை உலகளவில் வளர்ந்து வருகிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE