'பொள்ளாச்சி:''தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்பு உடையவர்களுக்கு தகுந்த பாடம் கற்றுத்தரப்படும். யாராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்படுவர்,'' என, மகளிரணி செயலாளர் கனிமொழி பேசினார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி காந்தி சிலை முன் நடந்தது.தி.மு.க., எம்.பி., கனிமொழி பேசியதாவது:பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதை, ஆளுங்கட்சியினர் தடுக்க முயன்றனர். தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என, எச்சரிக்கை விடுத்ததால், பின்னர் அனுமதித்தனர்.ஆளுங்கட்சி நிர்பந்தம் காரணமாக, பாலியல் வழக்கு விசாரணை தாமதமாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அருளானந்தம், பாபு, ஹெரன்பாலை கைது செய்தனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு தகுந்த பாடம் கற்றுத்தரப்படும்.
யாராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்படுவர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க, தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை தி.மு.க., ஓயாது. இவ்வாறு, அவர் பேசினார்.மா.கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி உட்பட பலர் பேசினர்.
சாலை மறியல்
பொள்ளாச்சி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க, கனிமொழி தி.மு.க., நிர்வாகிகளுடன், 15க்கும் மேற்பட்ட கார்களில், கோவை நீலம்பூர் -- மதுக்கரை பை-பாஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தார். ஈச்சனாரி அருகே, கோவை -- பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில், போலீசார் தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர்.
அங்கு வாகனங்கள் வந்தபோது, தடுத்து நிறுத்தப்பட்டன.தி.மு.க.,வினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தடுப்புகளை அகற்ற முற்பட்டதால், 'தள்ளுமுள்ளு' ஏற்பட்டது. கனிமொழியும் காரிலிருந்து இறங்கிச் சென்று, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். போலீசாரை கண்டித்து, கோஷமிட்டனர். பின்னர், போலீசார் பொள்ளாச்சி செல்ல அனுமதித்தனர். இதனால், பிரச்னை முடிவுக்கு வந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE