தேனி : தேனி நகராட்சி 12வதுவார்டு பாண்டியன் தெருவில் ரோடு வசதி இன்றி ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
தேனி அல்லிநகரம் நகராட்சி 12வது வார்டுக்கு உட்பட்டு கக்கன்காலனி, குறிஞ்சிநகர், பாண்டியன் நகர் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு ஏழை, எளிய தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இந்த வார்டில் மக்கள் அடிப்படை வசதியான தெருவிளக்கு, சாக்கடை, குடிநீர் வசதியின்றி சிரமம் அடைகின்றனர்.முடங்கிய 60 அடி ரோடு பணி:பொம்மையகவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோயிலை இணைக்கும் நகராட்சி 60 அடி அகல ரோடு உள்ளது.
இந்த ரோட்டை ஒட்டி மனைகளை வாங்கியோர் சிலர் ரோட்டிற்கான இடத்தையும் பதிவு செய்ததால் ரோடு அமைக்கும் பணி அரைகுறையாக முடங்கியுள்ளது. கக்கன்காலனியில் இருந்து வரும் அகலமான ரோடு பாண்டியன் நகர் பகுதியில் தொடர முடியாமல் ஆக்கிரமிப்பில் சுருங்கியதால் ரோடு பணி முடங்கியுள்ளது. ஜல்லி கொட்டிய நிலையில் அரை கி.மீ. துார ரோடு பணி நிறைவு பெறாமல் உள்ளது. இன்னும் 100 மீட்டருக்கு ஆக்கிரமிப்பு அகற்றினால் நல்ல ரோடு வசதி கிடைக்கும் என்பது இப் பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.பொதுமக்கள் கருத்து:ஆம்புலன்ஸ் செல்ல ரோடு இல்லை:வளர்மதி, பாண்டியன் நகர்: பாண்டியன்நகரில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்கு கழிவுநீர் செல்ல சாக்கடை வசதி இல்லாததால் திறந்த வெளியில் கழிவுநீர் ஓடி குடியிருப்பு அருகே தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது. 15 அடி அகல பாதை இருந்தும் மின் கம்பம் நடுரோட்டில் இருப்பதால் ரோடு அமைக்க முடியவில்லை. இதனால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட இந்த வழியாக வர முடியவில்லை. நோயால் பாதிக்கப்படுவோரை ஆட்கள் சேர்ந்து துாக்கி செல்ல சிரமம் அடைகின்றோம். சாக்கடை, ரோடு வசதி கோரி நகராட்சி, கலெக்டர் அலுவலகம் வரை பல மனு அளித்தும் பிரச்னை தீரவில்லை.கழிப்பிடம் சீரமைக்க வேண்டும்:முனியம்மாள், பாண்டியன் நகர்: பெண்களுக்கு கழிப்பிட வசதி இல்லாததால் நீண்ட துாரம் சுடுகாடு அருகே திறந்த வெளியை பயன்படுத்துகிறோம்.
கக்கன் காலனியில் நகராட்சி கழிப்பிடம் 3 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி உள்ளது. இதனை சீரமைத்து கொடுத்தால் பெண்களுக்கு பயனாக இருக்கும். மகளிர் சுய உதவி குழுவினர் கழிப்பிடத்தை சீரமைத்து தர நகராட்சியில் மனு அளித்தும் தீர்வு ஏற்பட வில்லை. பிற பயன்பாட்டிற்கான உப்பு தண்ணீர் வசதி பற்றாக்குறை உள்ளதால் ஆழ்துளை குழாய் உள்ள வீடுகளில் இரவல் வாங்கி பயன்படுத்துகிறோம். மினி தொட்டியுடன் தண்ணீர் வசதி செய்திட வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE