மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் ஜிக்கா நிறுவன கடனுதவியுடன் ரூ.325 கோடியில் அமையும் ஒருங்கிணைந்த ஆப்பரேஷன் தியேட்டருக்காக பழைய கட்டடங்களை இடிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. கட்டுமான பணிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.
நீண்ட இழுபறிக்கு பிறகுதான் ஒருங்கிணைந்த ஆப்பரேஷன் தியேட்டர் திட்டத்திற்கு டீன் அறை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது. இங்கிருந்த கண் பிரிவு, தோல் நோய் வெளிநோயாளிகள் பிரிவு, 223ல் இருந்த பொது மருத்துவ பிரிவுகள், மருத்துவ அதிகாரிகள் அறை ஆகியவை முறையே பழைய பிரசவ வார்டு, தோல் நோய் பிரிவு (வார்டு எண் 61), பழைய மகப்பேறு பிரிவு முதல்மாடியின் கிழக்கு பகுதி, வார்டு எண் 209க்கு ஒரு வாரத்திற்கு முன் மாற்றப்பட்டன. தற்போது அடையாளம் காணப்பட்ட கட்டடங்களை இடிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. மண் அள்ளும் இயந்திரம் மூலம் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
சில நாட்களில் பணி நிறைவு பெற்றுவிடும். அதன் பிறகு ஒருங்கிணைந்த ஆப்பரேஷன் தியேட்டர் கட்டுமான பணி துவங்கும். 24 வகை தியேட்டர்களுடன் 7 மாடி கட்டடமாக நிறுவப்படும்.கட்டுமான பொறுப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆப்பரேஷன் தியேட்டர் திட்டத்திற்கு டெண்டர் நடைமுறைகள்அனைத்தும் முடிந்துவிட்டன. பழைய கட்டடங்களை இடிக்கும் பணி ஒரு வாரத்திற்குள் முடியும். அதன் பிறகு முதல்வர் அடிக்கல் நாட்டுவார். உடனடியாக பணிகள் துவங்கும்.அடிக்கல் நாட்டு விழா தேதி இன்னும் முடிவாகவில்லை' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE