புதுடில்லி: 'ரியல் எஸ்டேட் திட்டங்களை கண்காணிப்பது, உச்ச நீதிமன்றத்தின் வேலையில்லை' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
அரசியல் சாசனத்தின், 32வது பிரிவின்படி, அடிப்படை உரிமைகளை செயல்படுத்துவதற்காக, உச்ச நீதிமன்றத்தை மக்கள் நேரடியாக அணுக முடியும். இந்த சட்டப் பிரிவின் கீழ், நிவாரணம் கோரி, வீடுகள் கட்ட பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பலர் வழக்குகளை தொடர்ந்துள்ளனர். அவற்றின் அடிப்படையில் உச்ச நீதிமன்றமும் விசாரித்து வருகிறது.இந்நிலையில், டில்லியை அடுத்துள்ள நொய்டாவில், அலுவலக வளாகம் கட்டுவதற்காக, 49 கோடி ரூபாய் பணம் செலுத்தியும், கட்டுமானம் துவக்கப்படாததை எதிர்த்து, தனியார் கட்டுமான நிறுவனம் மீது, ஒரு தனியார் நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துஉள்ளது.
அதை விசாரித்த, நீதிபதி, டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளதாவது:நாடு முழுதும் ஆயிரக்கணக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. ரியல் எஸ்டேட் திட்டங்களை கண்காணிப்பது, உச்ச நீதிமன்றத்தின் வேலையில்லை; அது நீதிமன்றத்தின் பணியை அதிகரித்து விடும்.இது தொடர்பாக, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், ரியல் எஸ்டேட் கட்டுப்பாட்டு சட்டம், திவால் சட்டத்தின்கீழ், உரிய நிவாரணத்தை பெற முடியும். அதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE