அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா பதவிக்காலம் நீட்டிப்பு?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா பதவிக்காலம் நீட்டிப்பு?

Updated : ஜன 11, 2021 | Added : ஜன 11, 2021 | கருத்துகள் (25)
Share
சென்னை : அண்ணா பல்கலை துணைவேந்தரின் பதவிக்காலம் ஏப்ரலில் முடிவடையும் நிலையில், அவரது பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்து, உயர் கல்வித்துறை ஆலோசனை நடத்தியுள்ளது.தமிழகத்தில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு பல்கலையிலும், துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டால், அவர்கள் மூன்று ஆண்டுகள் பதவியில் நீடிப்பர்; பின், அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுவர். புதிய
AnnaUniversity, VC, Surappa, அண்ணா பல்கலை, துணைவேந்தர், சுரப்பா, பதவிக்காலம், நீட்டிப்பு

சென்னை : அண்ணா பல்கலை துணைவேந்தரின் பதவிக்காலம் ஏப்ரலில் முடிவடையும் நிலையில், அவரது பதவிக்காலத்தை நீட்டிப்பது குறித்து, உயர் கல்வித்துறை ஆலோசனை நடத்தியுள்ளது.

தமிழகத்தில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு பல்கலையிலும், துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டால், அவர்கள் மூன்று ஆண்டுகள் பதவியில் நீடிப்பர்; பின், அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்படுவர். புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, நிர்வாக பணிகளை அரசின் சார்பில் அமைக்கப்படும், ஒருங்கிணைப்பு குழு மேற்கொள்ளும். இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக, உயர் கல்வித்துறை செயலர் செயல்படுவார். பல்கலையின் சிண்டிகேட் மற்றும் செனட் சார்பில் ஒரு உறுப்பினர் நியமிக்கப்படுவார்.


எதிர்ப்பு


பெரும்பாலான பல்கலைகளில், மீண்டும், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படுவது காலதாமதமாகும். அதற்குள் நிர்வாக பணிகளை மேற்கொள்ளும் ஒருங்கிணைப்பு குழு, பல்கலைகளின் நிர்வாகத்தில், பல்வேறு மாற்றங்களை மேற்கொள்வது வழக்கம். இதற்கு கல்வியாளர்கள் மத்தியில், பல ஆண்டுகளாக எதிர்ப்பு உள்ளது.

இந்நிலையில், துணைவேந்தர் பதவிக்கான நடைமுறைகளை, முதல் முறையாக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மாற்றியுள்ளார். சேலம் பெரியார் பல்கலை; திருச்சி பாரதிதாசன் பல்கலை துணைவேந்தர்களின் பதவிக்காலம், இந்த மாதம் முடியவிருந்த நிலையில், அவர்களின் பதவிக்காலத்தை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து, கவர்னர் உத்தரவிட்டுள்ளார். இதனால், அரசின் உயர்கல்வி செயலர் தலைமையிலான கமிட்டி, பல்கலைகளின் நிர்வாகத்தை நேரடியாக கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


latest tamil news


இதை, தமிழக உயர் கல்வித்துறை எதிர்பார்க்காத நிலையில், கவர்னரின் நடவடிக்கைக்கு கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பாவின் பதவிக்காலம் ஏப்ரலில் முடிய உள்ளது. அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதாக, உயர் கல்வித்துறை சார்பில், ஆணையம் அமைத்து விசாரணை நடந்து வருகிறது.

துணைவேந்தர் சுரப்பாவின் விருப்பத்தை கேட்டு, அவருக்கு பதவி காலத்தை நீட்டித்து, கவர்னர் அலுவலகம் உத்தரவு பிறப்பிக்கலாம் என, கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை எப்படி கையாள்வது என, உயர்கல்வி துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.


சிக்கல்


சுரப்பா பதவிக்காலம் முடிந்தால், அவரை பதவியில் இருந்து விடுவித்து விட்டு, அவர் மீதான ஆணைய விசாரணையை தொடரலாம்; ஏப்ரல் முதல் அண்ணா பல்கலை நிர்வாகத்தை நேரடியாக கையில் எடுக்கலாம் என, உயர்கல்வி துறை திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், கவர்னரின் புதிய நடவடிக்கை, தமிழக உயர்கல்வி துறையின் திட்டங்களுக்கு, சிக்கலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X