சென்னை: சமத்துவ பொங்கல் விழாக்களில் பங்கேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலின், ‛விடியலுக்கான வெளிச்சத்தை கொண்டு வரட்டும் உதயசூரியனின் ஒளிக்கதிர்கள்' என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தை சூழ்ந்திருக்கும் இருள் விலகி உதரசூரியன் ஆண்டாக இது அமையும்.. பொங்கல் விழாவினை பண்பாட்டு மறுமலர்ச்சியாக கட்டமைத்த சிறப்பு திராவிட இயக்கத்துக்கு உண்டு. மதச் சடங்குகள், மந்திரங்கள் இல்லை. அவரவர் தெய்வங்களுக்கு அவரவர் விருப்பப்படி படையலிட்டு, சூரியனை வணங்கி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பொங்கல் நன்னாள் போல இன்னொரு விழாவை காண முடியாது.

அண்ணாதுரை காலம் தொட்டே திமுக.,வினர் பொங்கல் விழாவைத் தமிழர் திருநாளாக தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். கருணாநிதி ஆட்சிக்காலத்தில் திருவள்ளூவர் நாளும் இணைந்து கொண்டாடப்பட்டது. தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்கிற காலக் கணக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தை துவங்கிவரும் கருணாநிதி தான்.
ஜன.,13ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியிலும், 14ம் தேதி ஆவடி தொகுதியிலும் நடைபெறும் சமத்துவப் பொங்கல் விழாக்களில் பங்கேற்கிறேன். மக்களின் இதயங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும், விடியலுக்கான வெளிச்சத்தை கொண்டு வரட்டும் உதயசூரியனின் ஒளிக்கதிர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE