சென்னை: ‛‛ நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று யாரும் போராட்டம் நடத்தி, என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்'' என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
'அரசியலுக்கு வரப்போவதில்லை' என, நடிகர் ரஜினி அறிவித்துள்ள நிலையில், 'அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டு, அரசியலுக்கு வர வேண்டும்' என, சென்னையில் குவிந்த அவரது ரசிகர்கள், ஆவேசமாக வேண்டுகோள் விடுத்து, அறப் போராட்டம் நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன், 'வா தலைவா வா' என, அழைப்பு விடுத்து, கன்னியாகுமரி முதல் சென்னை வரை, 'ஜோதி'யுடன் தொடர் ஓட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினி வெளியிட்ட அறிக்கை: என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு... நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பில் இருந்தும், மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து, சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள். கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது. தலைமையின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்கள் மன்றத்தினர்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

நான் ஏன் இப்போது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே, விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று யாரும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம், வற்புறுத்த வேண்டாம் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். வாழ்க தமிழ் மக்கள். வளர்க தமிழகம். ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE