கோவை : ''மாற்றத்துக்கு தமிழகமே தயாராகிவிட்டது; இந்த வாய்ப்பை பயன்படுத்தி, என்னை கருவியாக்கி தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்,'' என, கோவை மக்களிடம் கமல் பேசினார்.
மக்கள் நீதி மையம் தலைவர் கமல் நேற்று கோவை மசக்காளிப்பாளையம், சவுரிபாளையம், புலியகுளம், லட்சுமி மில்ஸ், காந்திபுரம் உள்பட பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது:
மக்களுக்கும் எனக்குமான அன்பு, பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இன்று நீங்கள் என் மீது காட்டுவது அன்பு மட்டுமல்ல; நம்பிக்கையும் தான். மாற்றத்துக்கு தமிழகமே தயாராகிவிட்டது. இதன் அடையாளமாக, நான் செல்லும் வழிகளில் எல்லாம் மக்களிடம் எழுச்சியை காண முடிகிறது.இந்த கூட்டம் சினிமாக்காரனை காண வரும் கூட்டம் என்றும், இவர்கள் எல்லாம் ஓட்டு போட மாட்டார்கள் என்றும் பேசுகின்றனர். இந்த கூற்றை தவறு என்று நீங்கள் நிரூபிக்க வேண்டும். உங்கள் தயவால் தான், சினிமா நட்சத்திரமாக இருந்தேன்.
இப்போது உங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் சிறு விளக்காக இருக்க விரும்புகிறேன். அந்த விளக்கை ஏற்றி வையுங்கள்; ஊழல் புயலில் விளக்கு அணைந்துவிடாமல் பாதுகாப்பது உங்களின் கடமை. அந்த நம்பிக்கையுடன் தான் இங்கு வந்துள்ளோம்.தாய்மார்கள், இளைஞர்கள், விவசாயிகள் என, பலத்தரப்பட்டவர்களுக்கும் பல்வேறு அரிய திட்டங்களை தீட்டி வைத்துள்ளோம். தாய்மார்களுக்காக வகுத்துள்ள திட்டம் ஆசியாவிலேயே வேறு எந்த கட்சியும் செய்யவில்லை.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மட்டுமில்லாமல், வேலை தரும் முதலாளியாக மாற்ற வேண்டும்.வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் கொடுக்க உள்ளோம். இது மற்றவர்களை போல் இலவசமாக கொடுத்து ஓட்டு வாங்க அல்ல. நானும், நீங்களும் எவ்வித இடைத்தரகர்களும் இன்றி உரையாட பயன்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். கருவியாக என்னையும் பயன்படுத்தி கொள்ளுங்கள். ஊர் கூடி ஒன்றாக தேர் இழுத்தால் நாளை நமதே.
இவ்வாறு, அவர் பேசினார்.
சைகை மொழி பேசிய கமல்
புலியகுளம் பகுதியில் பிரசாரம் செய்ய கமல் வந்தபோது, 'மைக்' திடீரென வேலை செய்யவில்லை. இதையடுத்து கூடியிருந்த மக்களிடம், சைகை மொழியில் கமல் பேசினார். தனது கட்சி சின்னம், ஊழல், வெற்றி நிச்சயம் போன்றவற்றை குறிக்கும் வகையில், சைகைகளால் மக்களிடம் பேசினார். அப்போது கூடியிருந்த மக்கள் கமலிடம், 'விருமாண்டி மீசையை போன்று முறுக்கி காட்டுங்கள்; பிக்பாஸில் இந்த வாரம் யார் வெளியே போவார்கள்' போன்ற கேள்விகளை கேட்டனர். இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
போக்குவரத்து பாதிப்பு
கமல் பிரசாரம் மேற்கொண்ட சொகுசு காருடன், இரண்டு பிரசார வேன்கள், 20க்கும் மேற்பட்ட கார்கள் வலம் வந்தன. இந்த வாகனங்கள் ஒன்றாக அணிவகுத்து சென்றதால், மசக்காளிப்பாளையத்தில் இருந்து சவுரிபாளையம், புலியகுளம், காந்திபுரம் என, பல இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. போலீசாரும் போதிய அளவில் இல்லாததால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE