துவங்கட்டும் தடுப்பூசி பணி: ஒழியட்டும் கொரோனா தொற்று

Added : ஜன 11, 2021
Share
Advertisement
சீனாவின் வூகான் நகரில், 2019 இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுதும், 218 நாடுகளில் பரவியுள்ளது. ஒன்பது கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 19 லட்சத்து, 35 ஆயிரம் பேர் வரை இறந்துள்ளனர். இந்தியாவில் மட்டும், 1 கோடியே, 4 லட்சத்து, 51 ஆயிரத்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டு, அதில், 1 லட்சத்து, 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். தடுப்பு மருந்துகளோ, ஊசிகளோ இல்லாத
துவங்கட்டும் தடுப்பூசி பணி: ஒழியட்டும் கொரோனா தொற்று

சீனாவின் வூகான் நகரில், 2019 இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுதும், 218 நாடுகளில் பரவியுள்ளது. ஒன்பது கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 19 லட்சத்து, 35 ஆயிரம் பேர் வரை இறந்துள்ளனர். இந்தியாவில் மட்டும், 1 கோடியே, 4 லட்சத்து, 51 ஆயிரத்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டு, அதில், 1 லட்சத்து, 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

தடுப்பு மருந்துகளோ, ஊசிகளோ இல்லாத நிலையில் பரவிய இந்த வைரசால் ஏற்பட்ட பாதிப்பு, இன்னும் தொடர்வது தான் கொடுமையிலும் கொடுமை. அதே நேரத்தில், இந்த வைரஸ் பரவலை தடுக்க, நம் நாட்டில், மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு உத்தரவால், ஏராளமானவர்கள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்கு ஆளாகி, அதிலிருந்து மீள்வது எப்போது என்ற ஏக்கத்தில் உள்ளனர். இந்த கொடிய வைரசால், நாட்டின் பொருளாதாரமும் பெருமளவு பாதிக்கப்பட்டது. ஏராளமானோர் வேலை வாய்ப்புகளை இழந்து, புதிய வேலை தேடும் நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். மொத்தத்தில், கொரோனா வைரசால் ஏற்பட்ட பாதிப்புகள் சொல்லி மாளாது. மேலும், திடீர் திடீரென நிகழ்ந்த உயிரிழப்புகளாலும், பலர் தங்களின் உறவுகளை இழந்துள்ளனர். இந்த கொடூரமான வைரஸ், உலக நாடுகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த நேரத்தில், அதை ஒழிப்பதற்கான தடுப்பு மருந்துகள் தயாரிப்பிலும், உலகின் முன்னணி நிறுவனங்கள் பல தீவிரமாக களமிறங்கின.

நம் நாட்டில் உள்ள பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனங்களும், இந்த விஷயத்தில் அதிக அக்கறை காட்டின. மத்திய அரசும், இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தது. இதன் பலனாக, ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோ டெக்' நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து, 'கோவாக் ஷின்' என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது. அதேபோல, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், 'அஸ்ட்ரா ஜெனேகா' மருந்து நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய, 'கோவி ஷீல்டு' தடுப்பூசியை, மஹாராஷ்டிரா மாநிலம், புனேயில் உள்ள, 'சீரம்' நிறுவனமும் தயாரித்துள்ளது.இந்த இரண்டு வித தடுப்பூசிகளையும், அவசர சூழ்நிலைக்கு பயன்படுத்திக் கொள்ள, இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து, தடுப்பூசிகளை பெரிய அளவில் சேமித்து வைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றை போடுவது தொடர்பான ஒத்திகைகளும், நாடு முழுதும் பல்வேறு இடங்களில் நடந்துள்ளன.

வரும், ௧௬ம் தேதி முதல் இந்த தடுப்பூசிகளை போடும் பணி துவங்க உள்ளது. முதல் கட்டமாக, சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்கள் என, மூன்று கோடி பேருக்கு போடப்பட உள்ளது. அதன்பின், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்பட, 27 கோடி பேருக்கு போடப்படும் என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளது, இந்த வைரசால் பெரும் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு, ஆறுதலும், மகிழ்ச்சியும் தரும் செய்தி.

அதேநேரத்தில், உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதும், மக்களை பீதியில் ஆளாக்கியுள்ளது. அதனால், இந்த தடுப்பூசி போடும் நடவடிக்கையால், கொரோனா வைரஸ் தன் கொடூர கரங்களை தொடர்ந்து நீட்டித்து வருவது முடிவுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

'தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி, அனைவருக்கும்இலவசமாக போடப்படும்' என, முதல்வர் இ.பி.எஸ்., ஏற்கனவே அறிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகைகளும், தமிழகத்தில் அதிக இடங்களில் நடந்துள்ளன. சுகாதார பணியாளர்களுக்கும், ஊசி போடுவது தொடர்பாக, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, கொரோனாவுக்கு எதிராக, சில மாதங்களாக சிறப்பாக பணியாற்றி வரும், டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் என, ஆறு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. அதன்பின், முன்னுரிமை அடிப்படையில், வயது அடிப்படையில், மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் படிப்படியாக போடப்பட உள்ளது.

மாநில நலன் கருதி, மத்திய அரசுடன் பல்வேறு விஷயங்களில் இணக்கமாக செயல்படும், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையிலான அரசு, தமிழகத்திற்கு என, அதிக அளவில் தடுப்பூசிகளை கேட்டு பெற்று, அவற்றை விரைவில் அனைவருக்கும் செலுத்தி, கொரோனாவை மாநிலத்தை விட்டு விரட்ட வேண்டும். ஏற்கனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில், சிறப்பாக செயல்பட்டதாக தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நல்ல பெயர் உள்ளது.

வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் கொரோனாவை ஒழித்தால், அது, தமிழக அரசுக்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமையும்.அத்துடன், கொரோனா பரிசோதனைக்கு ஏராளமான ஆய்வகங்களுக்கு அனுமதி அளித்தது போல, தடுப்பூசி போடுவதிலும், நிறைய மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கினால் நல்லது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர்; அதுபோல, கொரோனா ஒழிந்து, மக்கள் நலம் பெற்றால் நல்லதே.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X