சென்னை : கடந்த, 2019 - -20ம் நிதியாண்டுக்கு, அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நேற்றுடன் நிறைவடைந்தது.
கொரோனா தொற்று காரணமாக, 2019 -- 20ம் நிதியாண்டிற்கு, அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது. இறுதியாக நீட்டிக்கப்பட்ட அவகாசம், நேற்றுடன் நிறைவடைந்தது.
இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வரி செலுத்துவோரின் கோரிக்கையை ஏற்று, அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், இந்தாண்டு ஜன., 10 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.மார்ச், 31 வரை, அபராதம் செலுத்தி கணக்கு தாக்கல் செய்யலாம். இதன்படி, 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருவாய் ஈட்டுவோர், 1,000 அபராதமும், 5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுவோர், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும்.இவை, கணக்கு தணிக்கைக்கு அவசியம் இல்லாத, வரி கணக்குகளுக்கு மட்டும் பொருந்தும். தணிக்கை செய்ய வேண்டிய கணக்குகளுக்கு, பிப்., 15 வரை அவகாசம் உள்ளது. அதற்குள், அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்யலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தமிழகத்தில் 34 லட்சம் பேர்!கடந்த, 2019- - 20ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை, நாடு முழுதும், 5.5 கோடி பேர் தாக்கல் செய்துள்ளனர். இது, 2018 --19ம் நிதியாண்டில், தற்போதைய கால கட்டம் வரை, 6.51 கோடி நபர்களாக இருந்தது.தற்போது வரை, தமிழகத்தில் மட்டும், 34 லட்சம் பேர், கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இது, கடந்த ஆண்டில், 42 லட்சமாக இருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE