சிவகிரி: கொடுமுடி, பாசூர் காவிரிக்கரை அருகே, டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு கடந்த மாதம், 14ல், 10 பேர் கும்பல் நள்ளிரவில், காவலாளி கருப்பசாமி, பார் காவலாளி சின்னத்தம்பியை கட்டி போட்டு, பூட்டை உடைத்து, 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில், கண்காணிப்பு கேமராக்களை கொள்ளையடித்து சென்றது. மலையம்பாளையம் போலீசார், கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில் சிவகிரியை அடுத்த குட்டப்பாளையத்தை சேர்ந்த தருண்ராஜ், 22; கார் ஸ்டிக்கர் ஒட்டும் வேலை செய்கிறார். கரூர், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன், 27; ஆறு ஆம்புலன்ஸ் வாகனங்களை சொந்தமாக வைத்து ஓட்டி வருகிறார். இருவருக்கும் டாஸ்மாக் கடை கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்தனர். கொள்ளையில் மேலும் தொடர்புடைய மதுரை, தெப்பக்குளத்தை சேர்ந்த மணிகண்டன், கரூரை சேர்ந்த பிரசாந்த், பிரசாத், மதுரையை சேர்ந்த சீனிவாசன் ஆகியோர், ஒரு கொலை வழக்கிலும், கரூர், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த சரவணபாரதி, திருமலை ஆகியோர், கஞ்சா வழக்கிலும் வேலாயுதம்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. மற்ற இருவரை, மலையம்பாளையம் போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே தருண்ராஜ், கார்த்திகேயனை, பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபி கிளை சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ஒரு அப்பாச்சி டூ வீலர், ஆம்புலன்ஸ் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE