சேலம்: சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள, முதல்வர் பழனிசாமி வீட்டுக்கு, கோரிக்கை மனு அளிக்க வந்த பாலிடெக்னிக் ஆசிரியர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர்.
அரசு, உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள, 1,059 பணியிடங்களை நிரப்ப, 2017ல், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தேர்வு நடந்தது. இதில், முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரையடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டதுடன், அதில் கலந்து கொண்ட, 196 பேருக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டது. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள், தங்களுக்கு பணி வழங்க அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். முதல்வர் பழனிசாமியை சந்தித்து, புகார் அளிக்க முடிவு செய்த அவர்கள், முதல்வர் சென்னையில் இருக்கும் நிலையில், நேற்று சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டுக்கு வந்தனர். தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த, 80 பேர் முதல்வர் வீட்டுக்கு செல்ல தயாரான நிலையில், சூரமங்கலம் மெயின் ரோட்டில் அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர். முதல்வர் சென்னையில் உள்ளதால், அங்கு சென்று புகார் கொடுங்கள், கோரிக்கை மனுவை வழங்கினால், முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்வதாக போலீசார் உறுதியளித்தனர். புகார் அளிக்க வந்தவர்கள், கோரிக்கை மனு வழங்காமல் சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE