சேலம்: ''உலகிலேயே சிறந்த நாடு இந்தியா,'' என, மார்கழி மகோத்சவ விழாவில் மாஜி கவர்னர் சண்முகநாதன் பேசினார்.
சேலம் மாவட்ட சவுராஷ்டிரா முன்னேற்ற சங்கம் சார்பில், சிங்கமெத்தையில் சவுராஷ்டிரா கல்யாண மண்டபத்தில், கடந்த, 8 முதல் மார்கழி மகோத்சவம் என்ற கலைவிழா நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று, மேகாலயா, மணிப்பூர், அருணாசல பிரதேசத்தின் முன்னாள் கவர்னர் சண்முகநாதன் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பேசியதாவது: வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில், தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகள், சிவனின், 12 ஜோதிர்லிங்கங்கள், 51 சக்தி பீடங்கள், 108 வைணவ திவ்ய தேசங்கள் மற்றும் உலக மக்கள் அனைவரும் போற்றக்கடிய எண்ணற்ற மகான்கள், துறவிகள் அவதரித்த நாடு இந்தியா. இதில், சவுராஷ்டிரர்கள் தனித்துவமானவர்கள். இச்சமூக மக்கள் குஜராத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், உலகம் முழுக்க நிறைந்துள்ளனர். இவர்கள், பல நல்ல செயல்களை செய்து வருகின்றனர். தனித்துவமான இவர்கள், தேசிய நீரோட்டத்தில் கலந்து நாட்டை உயர்த்த முன்வர வேண்டும். தமிழகத்தில் மதுரை, தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக, சேலத்தில் சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, பயிற்சி மையம், தொழிற்சாலைகள் ஏற்படுத்தி நாட்டை வலிமைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ஏற்பாடுகளை சவுராஷ்டிரா சமூக முன்னேற்ற சங்க தலைவர் மோகன், செயலாளர் சந்திரசேகர் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE