பெங்களூரு: "இதற்கு முன் கட்டாயம், அவசியம் ஏற்பட்டால் மட்டும், அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், மாநில அரசு, தற்போது அனைத்து சட்டங்களையும், அவசர சட்டம் மூலம் அமல்படுத்துகிறது," என, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்தார்.
பா.ஜ., அரசின் 'ஐந்து திட்டங்கள் எண்ணிலடங்கா பொய்கள்' என்ற பெயரில், காங்கிரஸ் தயாரித்துள்ள கையேட்டை, சித்தராமையா நேற்று வெளியிட்டார்.
இவர் பேசியதாவது: நான் முதல்வராக இருந்த போது, விவசாயி அல்லாதவர்கள், விவசாய நிலத்தை வாங்க வாய்ப்பளிக்கவில்லை. ஆனால் சித்தராமையாவே, நில மேம்பாட்டு சட்டம் பிரிவு 79ஏ மற்றும் 79-பிக்கு திருத்தம் கொண்டு வர முற்பட்டதாக, தவறாக பிரசாரம் செய்கின்றனர். எதிர்க்கட்சியான காங்கிரசின், கருத்து என்ன என்பதை, கையேட்டில் குறிப்பிட்டுள்ளோம். பா.ஜ., அரசு, ஏ.பி.எம்.சி., சட்டம், நில மேம்பாட்டு சட்டங்களுக்கு திருத்தம், பசுவதை தடை சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இச்சட்டங்களால், விவசாயிகளுக்கு பாதிப்பில்லை, நல்லது தான் என கூறுகின்றனர்.
இதில் எது உண்மை, எது பொய் என்ற அம்சங்களை சேர்த்து, கையேடு கொண்டு வந்துள்ளோம். ஏ.பி.எம்.சி.,க்களை முழுவதுமாக மூடுவதே, பா.ஜ.,வின் நோக்கம். விவசாய கட்டுப்பாடு மார்க்கெட்டுகளை, ரத்து செய்ய, இது சரியான நேரம் என, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நில மேம்பாட்டு சட்டத்துக்கு, திருத்தம் கொண்டு வருவதால், யார் வேண்டுமானாலும், விவசாயம் செய்யலாம். தேவராஜ் அர்ஸ் முதல்வராக இருந்த போது, நில மேம்பாட்டு சட்டத்துக்கு, திருத்தம் கொண்டு வந்து, உழுபவனுக்கே நிலத்தை சொந்தமாக்கினார்.
ஆனால் தற்போதைய சட்டத்திருத்தத்தால், விவசாய நிலம் வாங்கலாம். தொழிலதிபர்கள் ஆதானி, அம்பானி உட்பட, யார் வேண்டுமானாலும், நிலம் வாங்கலாம். இதனால் சிறிய விவசாயிகளும் கூட, நிலத்தை விற்றுவிட்டு, பெரிய நிறுவனங்களில் பணிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களுக்கு, உதவியாக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE