மைசூரு:மைசூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தலில், அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ., மற்றும் காங்கிரசுக்கு ஆதரவளிக்காமல், நடுநிலை வகிக்க, ம.ஜ.த., ஆலோசிக்கிறது.
மைசூரு மாநகராட்சிக்கு, 2020, ஜனவரியில் நடந்த தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இம்மாநகராட்சியில், பா.ஜ., 21; காங்., 19; ம.ஜ.த., 18 கவுன்சிலர்களை வைத்துள்ளது. ஒரு, பி.எஸ்.பி., ஐந்து சுயேட்சை கவுன்சிலர்கள் உள்ளனர்.மைசூரு மாநகராட்சியில், ம.ஜ.த., மற்றும் காங்., கூட்டணி வைத்துள்ளன. மேயர் பதவியை ம.ஜ.த.,வுக்கு, காங்., விட்டுக்கொடுத்தது.
தற்போது, இரண்டு கட்சிகளிடையே இடையே, விரிசல் ஏற்பட்டுள்ளது.இம்மாதம் நடக்கும், மைசூரு மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தலில், கூட்டணி இல்லாமல் ஆட்சியை பிடிக்க முடியாது. இம்முறை பா.ஜ.,வுடன், ம.ஜ.த., கூட்டணி வைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. மேயர் தேர்தல் தொடர்பாக, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., - சா.ரா.மகேஷ் தலைமையில், நேற்று கூட்டம் நடந்தது.இம்முறை பா.ஜ., காங்கிரசுக்கு ஆதரவளிக்காமல், எதிர்க்கட்சி வரிசையில் அமரலாம் என, ம.ஜ.த., கவுன்சிலர்கள் பலரும் அறிவுறுத்தினர்.மேயர் தேர்தல் தொடர்பாக, இரண்டாவதாக நடந்த கூட்டத்திலும் கூட, ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
சா.ரா.மகேஷ் கூறுகையில், ''ம.ஜ.த., கவுன்சிலர்களின் கருத்தை, கட்சி மேலிடத்தின் கவனத்துக்கு, கொண்டு செல்வோம். பா.ஜ., அல்லது காங்கிரசுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக, முடிவு செய்யவில்லை,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE