கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் பசுமை காய்கறிகள் விற்பனை அதிகரித்து கடந்தாண்டு ரூ.21.12 கோடியை எட்டியது. கொரோனா தொற்று காலங்களிலும், நுகர்வோர்கள் வருகை அதிகரிப்பால் உழவர் சந்தை விற்பனை சிறப்பு பெற்று உள்ளது.
கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான வளாகத்தில் கடந்த 2000-ம் ஆண்டு நவ.8-ம் தேதி தி.மு.க., ஆட்சியில் உழவர் சந்தை துவக்கப்பட்டது. துவங்கிய ஆண்டிலிருந்து, கள்ளக்குறிச்சி உழவர் சந்தை, நுகர்வோர்களுக்கும், விவசாயிகளுக்கும் உதவும் சந்தையாக இருந்து வருகிறது.கள்ளக்குறிச்சி பகுதியில் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கோமுகி, மணிமுக்தா ஆகிய இரு அணைகள் மூலமாக இப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
வேளாண் மற்றும் தோட்டக் கலைத்துறை உதவியுடன் விவசாயிகள் கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களை மட்டும் பயிரி டாமல், பணப்பயிரான பசுமை காய்கறிகளையும் பயிரிட்டு விற்பனைக்கு கொண்டு வருவது அதிகரித்து வருகிறது.விவசாயிகளின் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்கவும், நுகர்வோர்களும் பயனடையவும் கள்ளக்குறிச்சி உழவர் சந்தை நிரந்தரமான பாலமாக இருந்து வருகிறது.
உழவர் சந்தை மழைக்காலங்களில் சேரும் சகதி யுமாக இருந்து வந்த அவல நிலை மாறி வளாகம் முழுவதும் சிமென்ட் தளம் அமைக்கப்பட்டு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பலப்படுத்தப்பட்டது. கடைகளும் விரிவு படுத்தப்பட்டது. காய்கறிகளுக்கு லக்கேஜ் கட்டணமின்றி அரசு பஸ்களில் இலவசமாக எடுத்து வந்து விவசாயிகள் அதிகாலையில் உழவர் சந்தை முன்பு நிறுத்தி இறக்கிவிடுகின்றனர்.மகளிர் சுய உதவிக்குழுவினர் வெளிச்சந்தைகளுக்கு சென்று கேரட், பீட்ரூட், பீன்ஸ், காளி பிளவர் உள்ளிட்ட காய்கறிகளை வாங்கி வந்து நுகர்வோர் கள் பயனடையும்படி தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
கடந்த 2020-ம் ஆண்டு ஜன.1 முதல் டிச.31 வரை விவசாயிகளும், நுகர்வோரும் பயனடைந்த விபரங்களையும், அதன்மூலம் விற்பனையான விபரங்களும் வருமாறு: கடந்த ஓராண்டில் 41 ஆயிரத்து 97 விவசாயிகள், 3 ஆயிரத்து 612 டன் பசுமை காய்கறிகளும், மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலமாக, ஆயிரத்து 176 டன் காய்கறிகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.21 கோடியே 12 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்று உள்ளது. மொத்தமாக 6 லட்சத்து 83 ஆயிரத்து 573 நுகர்வோர்கள் பயனடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக உழவர் சந்தை, அரசு ஆண்கள் பள்ளி, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாற்றப்பட்டு பாதிப்படைந்து வந்த நிலையிலும், கள்ளக்குறிச்சி வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் உலகம்மை முருகக்கனி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் நாள்தோறும் விவசாயிகளும் நுகர்வோர்களும் குவிந்து வருகின்றனர்.இந்த சந்தையினை நிர்வாக அலுவலர் இசைச்செல்வன் நிர்வகித்து வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE