புதுச்சேரி : ஜிப்மரில் நடந்த சிறப்பு கலந்தாய்வை திடீரென ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மாணவர்கள்,பெற்றோர்கள் நுழைவு வாயில் எதிரே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மருத்துவ கலந்தாய்வு குழு உத்தரவின்படி முதற்கட்டம், இரண்டாம் கட்டம், இறுதிகட்ட கலந்தாய்விற்கு பிறகு ஏற்படும் காலியிடங்களை சிறப்பு கவுன்சிலிங் மூலம் நிரப்பி கொள்ள அனுமதி அளித்துள்ளது.இதன்படி ஜிப்மரில் காலியாக உள்ள 19 இடங்களுக்கு பதிவு செய்திருந்த 190 மாணவர்களுக்கு நேற்று சிறப்பு கவுன்சிலிங் நடப்பதாக இருந்தது. ஆனால் அழைப்பு விடுத்திருந்த 190 மாணவர்களில் ஒருவர் கூட வரவில்லை.ஆனால் பதிவு பட்டியலில் இடம் பெறாத புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் குவிந்திருந்தனர்.
அழைப்பு பட்டியலில் உள்ள மாணவர்கள் யாரும் வராததால் சிறப்பு கவுன்சிலிங் ரத்து செய்வதாக ஜிப்மர் நிர்வாகம் அறிவித்தது.ஆவேசமடைந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் , அழைப்பு விடுக்கப்பட்ட 190 மாணவர்களும் வேறு கல்லுாரிகளில் சேர்ந்துவிட்டதால், தற்போது வந்துள்ள மாணவர்களை கொண்டு சிறப்பு கவுன்சிலிங் நடத்த வலியுறுத்தினர். அதனை ஜிப்மர் நிர்வாகம் ஏற்க மறுத்தது.அதனைக் கண்டித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஜிப்மர் நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் சங்கர் படே பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கலந்தாய்வை ஜிப்மர் நடத்தவில்லை. இந்திய மருத்துவ கலந்தாய்வு குழு தான் நடத்துகின்றது. அவர்கள் வழங்கும் பட்டியல் படியே நேர்காணல் நடத்தி சான்றிதழ் சரி பார்த்து சேர்க்கப்படுகிறது.எனவே எம்.சி.சி., இணையதளத்தில் பதிவு செய்த பிறகு கவுன்சிலிங் நடத்த முடியும். அடுத்த சிறப்பு கவுன்சிலிங்கிற் கான பதிவு 12ம் தேதி வரை நடக்கின்றது.13ம் தேதி கலந்தாய்வில் பங்கேற்போர் பட்டியல் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் 15ம் தேதி சிறப்பு கலந்தாய்வு நடக்கும் என தெரிவித்தார். இதனை ஏற்று மாணவர்கள், பெற்றோர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE