நாமக்கல்: பறவைக் காய்ச்சல் பரவலால், கோழிப்பண்ணை தொழில் பாதிப்பை சந்தித்து வரும் சூழலில், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது.
சங்க தலைவர் சிங்கராஜ் பேசியதாவது: தீவன மூலப்பொருள்களை மொத்தமாக கொள்முதல் செய்து, அவற்றை பண்ணையாளர்களுக்கு வழங்கவும், தீவனங்களை ஆய்வு செய்வதற்காக நவீன பகுப்பாய்வு கூடம் ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். முட்டை விலையை நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து, ஓரளவு குறைத்து விற்பனை செய்யலாம். வியாபாரிகள் வலியுறுத்தலுக்காக, விலை குறைப்பில் ஆர்வம் காட்டினால், பண்ணையாளர்கள்தான் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். அதேபோல் முட்டைக்கோழி, 1,400 கிராமிற்கு கீழ் இருந்தால், ஒரு ரூபாய் குறைத்து வாங்கிய வியாபாரிகள், தற்போது, 1,500 கிராம் என, உயர்த்தி ஒரு ரூபாயை குறைத்து விற்பனை செய்யும் நிலை உள்ளது. இதனால், பண் ணையாளர்கள் நஷ்டத்திற்கு தள்ளப்படுவர். வியாபாரிகளும் உரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மக்களிடையே முட்டை, கோழி இறைச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உறுப்பினர்களின் பண்ணைகளில் இருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையில் முட்டை, கோழிகளை பெற்று, அவற்றை சமைத்து மக்களிடையே கொடுத்து, இவற்றால் எவ்வித பாதிப்புமில்லை என்பதை கொண்டு சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்லில், கோழி பண்ணையாளர் சங்கம் அருகில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் முட்டை, கோழி இறைச்சியை பல்வேறு சுவைகளில் தயாரித்து, விற்பனை செய்யும் வகையிலான உணவகம் கட்டப்பட உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தலைவர் செல்வராஜ், முன்னாள் தலைவர் நல்லதம்பி உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE