சேலம் : சேலத்தில் முதியவரை கொலை செய்து, 55 சவரன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மூவரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம், செவ்வாய்ப்பேட்டை, அப்பாசாமி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன், 60; கடந்த, 8ம் தேதி மதியம் வீட்டில் தனியாக இருந்தார். மனைவி நவீனா, 55, வெளியில் சென்றிருந்தார்.அப்போது, வீட்டுக்குள் புகுந்த மூன்று பேர், சீனிவாசனை கடுமையாக தாக்கி, சுவரில் தள்ளியதில், தலையில் காயமடைந்து இறந்தார். மூவரும், வீட்டில் இருந்த, 55 சவரன் நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பினர்.வெளியில் சென்றிருந்த நவீனா, வீடு திரும்பினார். கணவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு, கழிப்பறை செல்லும்போது, வழுக்கி விழுந்து, தலையில் அடிபட்டு விழுந்திருக்கலாம் என கருதி, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். டாக்டர்கள் பரிசோதனையில், சீனிவாசன் இறந்து விட்டது தெரிந்தது.
வீட்டில் கொள்ளை நடந்ததை, நவீனா உணரவில்லை.இதற்கிடையில், கொண்டலாம்பட்டி, எஸ்.ஐ., ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், பழைய திருட்டு வழக்கில் தொடர்புடைய வேடுகாத்தாம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் கண்ணன், 26, என்பவரிடம், நேற்று விசாரணை நடத்தினர்.இதில், சீனிவாசனை கொலை செய்து, நகை, பணத்தை கொள்ளை அடித்ததாக அவர் கூறவே, அதிர்ச்சி அடைந்தனர். அவருடன் தமிழ்ச்செல்வன், 25, புருஷோத்தமன், 19, ஆகியோர் வந்ததாக கூறவே, அவர்களையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, விசாரணை நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE