'பா.ம.க., - பா.ஜ., - தே.மு.தி.க., - த.மா.கா., கட்சிகளைத் தானே சொல்கிறீர்கள்...' என, கேட்கத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன் பேட்டி: எங்களுடன் தோழமை கொண்டுள்ள கட்சிகள் தான், வரும் தேர்தலிலும் எங்களுடன் இணைந்து செயல்படும். பொங்கல் பண்டிகைக்கு பின்னே, கூட்டணி நிலவரம் இறுதியாகும்.
'நம் சென்னையில், மெரினா கடற்கரையில் ஒரு நினைவிடம் அகற்றப்பட்டது; அதற்கு இலங்கையில் இருந்து குரல் கொடுத்தனரா; அதுபோல, அந்நாட்டு விவகாரத்தில், நாம் இங்கிருந்து தலையிடக் கூடாது...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிக்கை: உலக நாடுகள் அமைதிக்காக கைகோர்க்கும் வேளையில், இலங்கையில், முள்ளிவாய்க்கால் நினைவிடம் தகர்க்கப்பட்டுள்ளது. அதற்கு, மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'இதைவிட, ராகுலுக்கு வேறு என்ன பெரிய பொறுப்பு இருந்துவிடப் போகிறது அல்லது இருக்கப் போகிறது...' என, காட்டமாக கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி பேச்சு: தமிழக காங்கிரசுக்கு, அனைத்து விதமான உதவிகளை செய்யவும், காங்., முன்னாள் தலைவர் ராகுல் தயாராக உள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டி; யார் யார் போட்டி என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். தேர்தலில் வெற்றி பெற நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.
'அவ்வப்போது உங்கள் கோரிக்கை நியாயமாகவும், நடுநிலையாகவும் உள்ளதே...' என, பாராட்டத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும், சிறப்பு பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலானோர் பெண்கள் தான். இவர்கள், முழு நேரமும் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு அரசு நிரந்தர பணி வழங்க வேண்டும்.
'காங்கிரசுக்கு, முதல்வர் பதவி மீது நாட்டமே இல்லையா...' என, கேட்கத் தோன்றும் வகையில், காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேட்டி: தி.மு.க., - காங்., கூட்டணி லோக்சபா தேர்தலில் எப்படி வெற்றி பெற்றதோ அதேபோல, சட்டசபை தேர்தலிலும் அமோக வெற்றி பெறும். மூன்று மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார்.
'உங்கள் கோரிக்கைக்காக, உண்மையாக, மத்திய - மாநில அரசுகளிடம் கேளுங்கள்; கொடுக்கப்படும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட, சாலையோர வியாபாரிகளுக்கு, கடனாக, 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. ஐந்து மாதங்களில், 27 ஆயிரத்து, 55 பேருக்கு மட்டுமே, கடன் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்த அனைவருக்கும், தமிழக அரசு கடன் தொகையை, விரைவாக வழங்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE