இந்திய பார்லிமென்ட் வரலாற்றில் முதன் முறையாக, உரை விபரங்கள் காகிதங்களில் அச்சடிக்கப்படாத பட்ஜெட், அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது. வழக்கமான அல்வா கிண்டும் மரபு நிகழ்ச்சியையும், இந்தாண்டு கைவிட திட்டமிடப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர், வரும், 29ல், ஜனாதிபதி உரையுடன் துவங்குகிறது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த மாதம், 1ம் தேதி, மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஒவ்வொரு ஆண்டும், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது, பார்லிமென்ட் திருவிழா கோலம் காணும்; அதற்கு முந்தைய பட்ஜெட் தயாரிப்பு நிகழ்ச்சிகளும், மத்திய அரசு வட்டாரங்களில் கவனத்தையும் ஈர்க்கும்.நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், ரயில்வே பட்ஜெட்டை, தனியாக தாக்கல் செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டது.
பொது பட்ஜெட்டுடன் இணைத்தே, ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்கள் அறிவிக்கப்படும் நடைமுறை துவங்கியது.
பட்ஜெட் தாக்கல் செய்ய வரும் நிதியமைச்சர், அந்த பட்ஜெட் உரை விபரங்கள் அடங்கிய காகிதங்களை, சூட்கேசில் வைத்து எடுத்து வருவார். காலையில், சபைக்குள் நுழையும் முன், போட்டோகிராபர்கள் முன், உயர் அதிகாரிகள் புடைசூழ, சூட்கேசை உயர்த்தி காட்டி, உற்சாகமாக காட்சி தருவார்.நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்ற பின், கடந்த ஆண்டு, இதிலும் மாற்றம் அரங்கேறியது. ஆங்கிலேயர் காலத்து பாணியான, சூட்கேசிற்கு பதிலாக, பட்ஜெட் உரையை, ஒரு சிவப்பு நிற பையில் எடுத்து வந்து, 'போஸ்' கொடுத்தார்.
இந்நிலையில் தான், வரலாற்றிலேயே முதன்முறையாக, பட்ஜெட் உரையை அச்சடிக்கப் போவதில்லை என்ற முடிவை, மத்திய அரசு எடுத்துள்ளது. பட்ஜெட்டை அச்சடிப்பதற்கு என்றே, நிதியமைச்சகத்தின், 'நார்த் பிளாக்' அலுவலகத்திற்குள், தனி அச்சகம் உள்ளது. இதில், ஏராளமானோர் பணியாற்றுகின்றனர். பட்ஜெட் உரை தயாராகி, அது அச்சடிக்கப்பட துவங்கிய நாளில் இருந்து, பார்லிமென்டில் பட்ஜெட் உரை தாக்கல் ஆகி முடியும் வரையில், இவர்கள் அச்சகத்தை விட்டு வெளியேறவே முடியாது.
அத்தனை பாதுகாப்பு கெடுபிடிகளுடன், பட்ஜெட் உரை அச்சடிக்கும் பணிகள் நடக்கும். இந்த ஆண்டு, கொரோனா அபாயம் இருப்பதால், அச்சகத்தில் ஏராளமானோர் ஒரே நேரத்தில் கூடியிருந்து பணியாற்றுவது, சரியாக இருக்காது என்ற அடிப்படையில், பட்ஜெட் அச்சடிப்பதை, மத்திய அரசு ரத்து செய்துவிட்டது.இந்த முடிவுக்கு, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு ஆகிய இருவரிடமும் இருந்து, ஒப்புதலும் பெறப்பட்டு விட்டதால், இந்த ஆண்டு, பட்ஜெட் உரையை, யாருமே அச்சு வடிவில் பார்க்க முடியாது.
அதற்கு பதிலாக, கம்ப்யூட்டரில் பட்ஜெட் உரையை படிக்கும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. எம்.பி.,க்களுக்கும், 'சிடி, பென்டிரைவ், டேப்லட்' போன்றவற்றின் வாயிலாக, பட்ஜெட் உரையை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு அதிரடியும் இந்த ஆண்டு நிகழப்போகிறது. பட்ஜெட் தயாரிப்பு பணிகள் முடிந்து, அச்சடிக்கும் வேலைகள் துவங்குவதன் அடையாளமாக, அல்வா கிண்டுதல் நிகழ்ச்சி நடக்கும்.
நிதியமைச்சர், உயர் அதிகாரிகள், அமைச்சக ஊழியர்கள் அனைவரும் பங்கேற்கும், அந்த முக்கியமான மரபு நிகழ்வு, வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும், ஜன., 20 அன்று, நிதியமைச்சகத்தில் சிறப்பாக நடக்கும்.
இந்த ஆண்டு, அல்வா கிண்டும் நிகழ்வும் ரத்தாகவுள்ளது. கடைசி நேரத்தில் முடிவு மாறினாலும் கூட, வழக்கமான கொண்டாட்டமாக இல்லாமல், ஒரு சிலர் மட்டுமே பங்கேற்கும் வகையில், சம்பிரதாய நிகழ்வாக அது நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே, பட்ஜெட் உரை புத்தகங்கள், பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே மறுக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு, அச்சிடவே வாய்ப்பில்லை என்பதால், எம்.பி.,க்கள், உயரதிகாரிகள் உள்ளிட்ட எவருக்குமே, பட்ஜெட் உரை நகல்கள் கிடைக்கப் போவதில்லை. - புதுடில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE