அ .தி.மு.க.,- பா.ஜ., இடையிலான கூட்டணி குழப்பத்திற்கு, நேற்று முற்றுப்புள்ளி
வைக்கப்பட்டது. முதல்வர் வேட்பாளர் யார் என்பதில், இக்கட்சிகளுக்கு இடையே சமரசம்
ஏற்பட்டதால், தமிழகத்தில், அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணி உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ஜ., -பா.ம.க., - தே.மு.தி.க.,- த.மா.கா., மற்றும்- புதிய நீதிக்கட்சி இடம் பெற்றன. கடந்த 2020 நவம்பரில், சென்னையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற விழாவில், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசுகையில், 'லோக்சபா தேர்தல் கூட்டணி, சட்டசபை தேர்தலிலும் தொடரும்' என, அறிவித்தனர்.
மவுனம்
அ.தி.மு.க., சார்பில், முதல்வர் வேட்பாளராக, இ.பி.எஸ்., அறிவிக்கப்பட்டார். இது தொடர்பாக, கூட்டணி கட்சிகள் வாய் திறக்காமல், மவுனம் சாதித்தன. 'சட்டசபை தேர்தலில், யார் தலைமையில் கூட்டணி, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை, தேசிய தலைமை தான் முடிவு செய்யும்' என, தமிழக பா.ஜ., தலைவர்கள் கூறினர்.
இதற்கு, அ.தி.மு.க., அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, இரு தரப்பினர் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நடிகர் ரஜினியுடன் கைகோர்க்க திட்டமிடுவதால், இ.பி.எஸ்.,சை முதல்வர் வேட்பாளராக ஏற்க, பா.ஜ., தயக்கம் காட்டுவதாக தகவல் பரவியது.
ஆனால், 'கட்சி துவக்கப் போவதில்லை' என, ரஜினி அறிவித்ததும், பா.ஜ., போக்கில் மாற்றம் தென்பட்டது. தமிழக பா.ஜ., தலைவர் முருகன், சென்னையில் முதல்வர் இ.பி.எஸ்.,சை சந்தித்து பேசியதை தொடர்ந்து, அ.தி.மு.க.,- - பா.ஜ., கூட்டணி உறுதியானது. பா.ஜ., நிர்வாகிகளும், அ.தி.மு.க., கூட்டணியில் இருப்பதை உறுதிப்படுத்தினர்.
அதைத் தொடர்ந்து, முதல்வர் வேட்பாளர் பிரச்னைக்கும், நேற்று தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர், சி.டி.ரவி முற்றுப்புள்ளி வைத்தார்.திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மற்றும் மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலில், பா.ஜ., தேசிய பொதுச்செயலர் ரவி, நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
பின், நிருபர்களிடம், அவர் கூறியதாவது: தமிழக மக்கள், பா.ஜ.,வுக்கு நல்ல வரவேற்பு கொடுக்கின்றனர். முந்தைய ஆண்டுகளை விட, வருங்காலங்களில், தமிழகத்தில், பா.ஜ., வலுப்பெறும்.
பெரும் வெற்றி
பா.ஜ., தலைவர்களுடன் இணைந்து, கட்சியினர் சிறப்பாக செயல்பட்டு வருவதால், வரும் தேர்தலில், பெரும் வெற்றி பெறுவோம்.பிரதமரும், நாங்களும், தமிழக மக்கள் நலனை பற்றியே சிந்திப்பதால், அவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழக மக்களின் நம்பிக்கை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இ.பி.எஸ்., மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர், கூட்டணியில் அங்கம் வகிப்பது பற்றியும், தேர்தலில் போட்டியிடுவது பற்றியும், அமித்ஷாவை சந்தித்து பேசி விட்டனர்.
தமிழகத்தில் பலமான கட்சியாக இருப்பது, அ.தி.மு.க., தான். கூட்டணியில் பிரதான கட்சியான, அ.தி.மு.க., முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்துள்ளது.இ.பி.எஸ்., -- ஓ.பி.எஸ் ஆகியோர் எடுப்பதே இறுதி முடிவு. அவர்களை முன்வைத்து தான், பா.ஜ., தேர்தலை சந்திக்க போகிறது. கூட்டணியில், அ.தி.மு.க., 'மேஜர் பார்ட்னர்' ஆகவும், பா.ஜ., 'மைனர் பார்ட்னர்' ஆகவும் உள்ளன. எப்போதும் போல, தமிழக மக்கள் சரியான முடிவை எடுத்து, அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றியை கொடுப்பர் என, நம்புகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
பா.ஜ., உடனான கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்த நிலையில், பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளுடன், அ.தி.மு.க., தலைமை கூட்டணி பேச்சை துவக்கி உள்ளது.
ராமதாசுடன் அமைச்சர்கள் பேச்சு!
அ.தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகித்து வரும் பா.ம.க., தலைமை, தன் நிலைப்பாடு குறித்து, மவுனம் காத்து வருகிறது. அத்துடன், கல்வி, வேலை வாய்ப்பில், வன்னியர்களுக்கு, 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, போராட்டங்களை நடத்தி வருகிறது.இரு தினங்களுக்கு முன் நடந்த, பா.ம.க., நிர்வாக குழு கூட்டத்தில், 'பொங்கலுக்குப் பின் நடக்கும், சட்டசபை கூட்டத் தொடருக்கு முன், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கும் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், அரசியல் ரீதியாக, அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்' என, அக்கட்சி தலைவர் ஜி.கே.மணி அறிவித்தார்
.
இந்நிலையில், நேற்று மின் துறை அமைச்சர் தங்கமணி, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாசை சந்தித்து பேசினர்.அப்போது, கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து பேசியதாக தெரிகிறது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, இந்த பேச்சு நடந்தது.
இதனிடையே, ராமதாஸ் வெளியிட்டுள்ள, 'டுவிட்டர்' பதிவில், 'அமைச்சர்களுடன், வன்னியருக்கான இட ஒதுக்கீடு குறித்து மட்டுமே பேசப்பட்டது. அரசியல் குறித்தோ, தேர்தல் குறித்தோ பேசப்படவில்லை. வன்னியர் இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை, கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை' என, தெரிவித்துள்ளார்.
- நமது நிருபர் --
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE