கோவை:பொங்கல் பண்டிகைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், கற்பித்தல் பணிகள் துவங்கும் வகையில், அனைத்து முன்னேற்பாடுகளும் செய்ய, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக, பள்ளிகள் திறப்பது குறித்த, கருத்துகேட்பு கூட்டம் சமீபத்தில் நடந்தது.இதில், 80 சதவீதம் பேர், பள்ளிகள் திறக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு பின், கற்பித்தல் பணிகள் தேக்கமின்றி தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.சுழற்சி முறையில் வகுப்புகள் நடக்கவுள்ளதால், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களை குழுக்களாக பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.ஒரு வகுப்பறைக்கு, 25 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், பாட அட்டவணை மாற்றப்படும். அனைத்து மாணவர்களுக்கும், அந்தந்த வார இறுதிக்குள், குறிப்பிட்ட அளவு சிலபஸ் முடிக்கப்படும். அனைத்து சனிக்கிழமைகளும் வேலைநாளாக அறிவிக்கப்படவுள்ளது.
வட்டார கல்வி அலுவலர்கள் கூறுகையில், 'பள்ளிக்கான பராமரிப்பு நிதி விடுவிக்கப்பட்டுள்ளதால், துாய்மை மற்றும் கட்டமைப்பு வசதிகளை, மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சானிட்டைசர், உடல் வெப்பம் அளவிடும் கருவி, சோப்பு, கழிவறை சுத்தம் செய்ய தேவையான உபகரணங்கள், பள்ளிகளில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி திறந்த பிறகு, சுகாதார சீர்கேடு சார்ந்த புகார்கள் ஏற்பட்டால், உரிய பள்ளி தலைமையாசிரியரே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். இது சார்ந்த அறிவிப்பு, பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE